கொரோனா சிகிச்சை மையங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு


கொரோனா சிகிச்சை மையங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு
x
தினத்தந்தி 2 April 2021 9:24 PM IST (Updated: 2 April 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

பாரதியார் மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்தார்.

கோவை,

கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதம் 50, 100 என படிப்படியாக அதிகரிக்க தொடங்கி தற்போது தினமும் பாதிக்கப்படு வோரின் எண்ணிக்கை 200-க்கும் மேல் இருந்து வருகிறது. 

அதில் குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது கொடிசியாவில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு தொற்று குறைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொடிசியா சிறப்பு சிகிச்சை மையம் மூடப்பட்டது.

இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. எனவே அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களில் ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள். 

 மேட்டுப்பாளையம் ரோடு மத்தம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 607 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் 400 படுக்கைகளுடனும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 250 படுக்கை வசதிகளுடனும் மேலும் 2 சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.

 பின்னர் அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இந்த சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படுவோருக்கு போதுமான சுகாதார வசதி, குடிநீர், கழிப்பிடம், படுக்கை, மின்சாரம் ஆகிய வசதிகள் உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

Next Story