வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.
ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உட்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டசபை தொகுதிகளின் வாக்கு எண்ணும் மையம் மயிலாடுதுறை ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன்நாயர், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரவீன் நாயர் கூறியதாவது:-
பாதுகாப்பு ஏற்பாடுகள்
சட்டசபை தேர்தலையொட்டி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் 1861 வாக்குசாவடிகளுக்கு செல்ல வேண்டிய வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் புகைப்படத்துடன் கூடிய சின்னம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்து தொகுதிகளிலும் பாதுகாப்பு அறைகளில் ஆயுதம் ஏந்திய போலீசார் மூலம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1050-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குசாவடிகளை பிரித்து புதிதாக 350 வாக்குசாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 1,861 வாக்குசாவடிகள் உள்ளன. இதில் 114 வாக்குசாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும்.
வாக்கு விண்ணப்ப படிவம்
தபால் வாக்கை பொறுத்தவரை 8,900 வாக்குசாவடி அலுவலர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்ப படிவம்-12 வழங்கப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தபால் வாக்கு பெற்றுள்ளனர். இதில் 1,200 அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்திவிட்டனர்.
காவல் துறையை சேர்ந்த 1,100 நபர்களுக்கும் மேலானவர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பம் படிவம் வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் தபால் துறை, ரெயில்வே துறை, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு அவர்கள் தபால் வாக்களிக்க அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story