மோசடி பணத்தை கொண்டு சென்ற 2 பேர் புதுக்கோட்டையில் சிக்கினர்


மோசடி பணத்தை கொண்டு சென்ற 2 பேர் புதுக்கோட்டையில் சிக்கினர்
x
தினத்தந்தி 2 April 2021 11:56 PM IST (Updated: 2 April 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் பாதுகாப்பு அமைச்சகம் என காரில் போலி பலகை வைத்து மோசடி பணத்தை கொண்டு சென்ற 2 பேர் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை, ஏப்.3-
புதுக்கோட்டையில் பாதுகாப்பு அமைச்சகம் என காரில் போலி பலகை வைத்து மோசடி பணத்தை கொண்டு சென்ற 2 பேர் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
வாகன சோதனை
சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டையில் பறக்கும்படையினர், வருமானவரித்துறையினர், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருகே வருமானவரித்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த விலை உயர்ந்த காரை மறித்து சோதனையிட்டனர். அந்த காரின் முன்பகுதியில் பாதுகாப்பு அமைச்சகத்தை குறிக்கும் `மினிஸ்ரிடி ஆப் டிபன்ஸ்' என ஆங்கிலத்திலும், இந்தியிலும் எழுதப்பட்ட பலகை வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த வருமானவரித்துறையினர், காரில் இருந்தவரிடம் விசாரித்தனர்.
ேமாசடி
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்துள்ளார். காரில் சோதனையிட்ட போது அதில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் இருந்துள்ளது. இது குறித்து திருக்கோகர்ணம் போலீசாருக்கு வருமானவரித்துறையினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரித்ததில் அவர் வாலாஜபேட்டையை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 33) என்பதும், டிரைவர் ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த மயில்ராஜ் (43) என தெரியவந்தது.
மேலும் விசாரணையில் தினேஷ்குமார், ரைஸ் புல்லிங் மோசடியில் ஈடுபட்டு வந்ததும், தற்போது ரூ.50 ஆயிரம் கொடுத்தால் 3 மாதத்திற்கு பிறகு பன்மடங்கு பணம் தருவதாக கூறி மோசடி செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் புதுக்கோட்டையை சேர்ந்த சாமுவேலிடம் ரூ.50 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு 2 மாதத்தில் பல லட்சம் ரூபாய் தருவதாக ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும் காரில் கொண்டு செல்லப்பட்ட பணம் மோசடி பணம் என்பது தெரிந்தது.
2 பேர் கைது
இதையடுத்து சாமுவேல் கொடுத்த புகாரின் பேரில் மோசடி வழக்கில் தினேஷ்குமாரையும், அவரது கார் டிரைவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தையும், காரையும் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த பாதுகாப்பு அமைச்சகம் பெயர் பொறித்த பலகை போலியானதாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story