திருவலம் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து


திருவலம் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 2 April 2021 6:37 PM GMT (Updated: 2 April 2021 6:37 PM GMT)

திருவலம் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

திருவலம்

திருவலம் பகுதியில் உள்ள மின் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
மின் நிலையத்தில்    திடீர் தீ விபத்து

வேலூரை அடுத்த திருவலம் அருகே 230 கிலோ வாட், திறன் கொண்ட மின் நிலையம் உள்ளது. இந்த மின் நிலையத்தில் உள்ள ஒரு மின்மாற்றியில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. 

உடனடியாக மின்நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
 
மின்தடை

இந்த தீ விபத்தினால் ராணிப்பேட்டை, மாவட்டத்தில் ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, மேல்விஷாரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டது‌. இதேபோல் வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வடுகந்தாங்கல், வேலூர், தொரப்பாடி, சத்துவாச்சாரி, பெருமுகை போன்ற பகுதிகளில் நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளும், ஊழியர்களும் உடனடியாக திருவலம் மின் நிலையத்தில் ஏற்பட்ட மின் பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு பகுதிக்கும் மின் வினியோகம் செய்யப்பட்டது.

பகலில் 110 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. அதன் தாக்கம் இரவிலும் இருந்தது. திடீரென மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தனர். அவர்கள் தூங்க முடியாமல் வீட்டின் மொட்டை மாடிகளிலும், வீட்டு வாசல்களிலும் தஞ்சமடைந்தனர்.

Next Story