வேலூரில் 110 டிகிரியை தாண்டி சுட்டெரித்த வெயில்

வேலூரில் 110 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வேலூர்
வேலூரில் 110 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
சுட்டெரித்த வெயில்
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வெயிலின் கொடுமை வேலூரில் தான் அதிகமாக இருக்கும். எனவே தான் வேலூரை வெயிலூர் என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தாண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது.
பிப்ரவரி மாதம் 7-ந் தேதி 90 டிகிரியாக பதிவாகியது. இதையடுத்து 23-ந் தேதிக்கு பின்னர் 90 டிகிரி முதல் 98 டிகிரி வரை அளவு பதிவாகியது. மார்ச் 30-ந் தேதி 106.3 டிகிரியாகவும், 31-ந் தேதி 106.7 டிகிரியாகவும், நேற்று முன்தினம் 109.2 டிகிரி வெயில் கொளுத்தியது.
110.1 டிகிரியாக
இந்த நிலையில் நேற்று 110 டிகிரியை தாண்டி 110.1 டிகிரியாக பதிவானது. காலை 7 மணிக்கே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. மதிய வேளையில் உக்கிரமாக சுட்டெரித்தது. சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேலூர் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. சாலைகளில் கானல் நீர் தென்பட்டது. அனல் காற்று வீசியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வியர்வையில் மக்கள் குளித்தனர். குழாயை திறந்தால் தண்ணீர் வெந்நீர் போல் வந்தது.
கோடை மழை பொழியுமா?
இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வற்ற தொடங்கி விட்டன. வேலூர் மலைக்காடுகளில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வாடி வதங்கி கருகியது. நடந்து சென்ற பாதசாரிகள் குடைகளை பிடித்துக் கொண்டு சென்றனர். பலர் தாகத்தை தணிக்க குளிர்பான கடைகளுக்கும், பழக்கடைகளுக்கும் படையெடுத்தனர். இதனால் அங்கு வியாபாரம் களைகட்டியது. இதுதவிர தர்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனையும் அமோகமாக நடந்தது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதாலும் கொரோனா பரவல் உள்ளதாலும் தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இனி வரும் நாட்களில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். வருண பகவான் கருணையால் கோடை மழை பொழியுமா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story