தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
தூத்துக்குடி, ஏப்:
தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு நேற்று நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புனிதவெள்ளி
ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகள் மற்றும் மரணத்தை நினைவுக்கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் 40 நாட்கள் தவக்காலம் அனுசரித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் தினத்தன்று தொடங்கியது.
தவக்காலத்தின் கடைசியில் ஏசு உயிர்நீத்த தினமான புனித வெள்ளி நேற்று கடைபிடிக்கப்பட்டது. புனித வெள்ளியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் சிலுவைப்பாதை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
சிலுவைப்பாதை
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் வகையில் ஏசு சிலுவையைச் சுமப்பது போன்ற சொரூபம் ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்து வரப்பட்டது. இந்த சிலுவைப் பாதை ஊர்வலத்தில் கிறிஸ்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தூத்துக்குடி திருஇருதய ஆலயத்தில் தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவைப்பாதை வழிபாடு நடந்தது.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இந்த வழிபாடுகளில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.
நாளை ஈஸ்டர்
கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு சிலுவைப்பாதை வழிபாடுகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிலுவைப்பாதை வழிபாடுகள் நடந்தன. இதில் முககவசம் அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன.
Related Tags :
Next Story