தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்


தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்
x
தினத்தந்தி 3 April 2021 9:29 PM GMT (Updated: 2021-04-04T02:59:42+05:30)

பெரம்பலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள் உள்ளன.

பெரம்பலூர்:

வாக்கு எண்ணும் மையங்கள்
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் (தனி) தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், குன்னம் தொகுதியில் 388 வாக்குச்சாவடிகளில் பதிவாகும் வாக்குகள் வேப்பூர் அரசு மகளிர் கலை-அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளது.
இதையொட்டி பெரம்பலூர் அரசு கல்லூரியிலும், வேப்பூரில் அரசு மகளிர் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் அறை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
கண்காணிப்பு கேமரா
வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு முடிவுற்ற பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவினை சரிபார்க்கும் எந்திரம், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைப்பதற்கு அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அறை, வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் மையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்காக கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கான முகவர்கள் அமருவதற்கு தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்கள் தற்போது மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Next Story