பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் தயார்


பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் தயார்
x
தினத்தந்தி 4 April 2021 8:34 PM GMT (Updated: 4 April 2021 8:34 PM GMT)

சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெறவுள்ளதையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1,569 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

பெரம்பலூர்:

நாளை ஓட்டுப்பதிவு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. பெரம்பலூர்(தனி) தொகுதியில் 1,47,320 ஆண் வாக்காளர்களும், 1,54,950 பெண் வாக்காளர்களும், 21 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 3,02,291 வாக்காளர்கள் உள்ளனர். குன்னம் தொகுதியில் 1,35,240 ஆண் வாக்காளர்களும், 1,38,442 பெண் வாக்காளர்களும், 13 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 2,73,695 வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலால் 1,000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகள் 2 ஆக பிரிக்கப்பட்டுள்ளதால், வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் தொகுதியில் 428 வாக்குச்சாவடிகளும், குன்னம் தொகுதிக்கு 388 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 816 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் தேர்தலன்று மொத்தம் 3,916 அலுவலர்கள் பணியாற்றவுள்ளனர்.
வாக்குச்சாவடிகள் தயார்
அந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. தொகுதி எண், பாகம் எண் எழுதப்பட்டு, முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க செல்வதற்கு சாய்தள பாதை இரும்பு கைப்பிடியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை உள்ளிட்டவையுடன் வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் வாக்குச்சாவடியில் இருந்து வெளியே 100 மீட்டர் தொலைவுக்குள் வாக்காளர்களை தவிர வேறும் யாரும் வரக்கூடாது என்பதற்காக எல்லைக்கோடு வரையும் பணியில் ஊழியர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள்
நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பெரம்பலூர், குன்னம் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள் (வி.வி.பேட்), வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அடங்கிய பை ஆகியவை அனுப்பும் பணி இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் பெரம்பலூர் தொகுதிக்கு பெரம்பலூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் இருந்தும், குன்னம் தொகுதிக்கு, குன்னம் தாலுகா அலுவலகத்திலும் இருந்தும் லாரிகள் மூலம் அவை அனுப்பப்படுகிறது. அந்த லாரிகள் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தயார் நிலையில் உள்ளன.
பாதுகாப்பு உபகரணங்கள்
கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களான தெர்மல் ஸ்கேனர் கருவியும், பாலித்தின் கையுறைகளும், முகக்கவசங்களும், கிருமிநாசினி பாட்டில்களும், சர்ஜிக்கல் முககவசம், அலுவலர்களுக்கு ரப்பர் கையுறைகளும், முழு உடல் கவசமும், வாக்குச்சாவடிக்கு பாலித்தின் பைகள், குப்பைத் தொட்டிகள், அட்டை பெட்டிகளும் பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு இன்று அனுப்பப்படவுள்ளது. பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீசார் 630 பேரும், முன்னாள் ராணுவ வீரர்கள், தீயணைப்பு துறை, வனத்துறை, ஓய்வு பெற்ற சிறைக்காவலர்கள் என 75 பேரும், 204 ஊர்க்காவல் படைவீரர்களும், மத்திய துணை ராணுவ படை வீரர்கள் 92 பேரும், கர்நாடக மாநில சித்திரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த 75 ஊர்க்காவல் படைவீரர்களும், கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ-மாணவிகளும் ஈடுபடவுள்ளனர். போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள், மாணவ-மாணவிகளுக்கு வாக்குச்சாவடி மையங்களில் எவ்வாறு பணியபுரிய வேண்டும் என்பது குறித்து ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆலோசனை வழங்கினார்.
தபால் ஓட்டுகள்
தேர்தலில் பணியாற்றவுள்ளவர்கள் தபால் ஓட்டுகள் போட்டு வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு தமிழகத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்-மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து, பெரம்பலூர்-குன்னம் தொகுதிகளில் முதியோர்-மாற்றத்திறனாளிகள் என மொத்தம் 1,827 பேரில், 1,748 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர். மேலும் பெரம்பலூர் தொகுதியில் 39 இடங்களில் 79 வாக்குச்சாவடி மையங்களும், குன்னம் தொகுதியில் 38 இடங்களில் 96 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 77 இடங்களில் உள்ள 175 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்ற மத்திய அரசில் பணிபுரிபவர்கள் நுண்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் போலீசாருடன் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் ஈடுபட உள்ளனர். மேலும் அந்த வாக்குச்சாவடி மையங்களின் வாக்குப்பதிவினை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 2 தொகுதிகளிலும் மாதிரி வாக்குச்சாவடி மையங்களும், மகளிருக்கான தனி வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
அரியலூர்- ஜெயங்கொண்டம்
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் தொகுதியில் 1,31,335 ஆண் வாக்காளர்களும், 1,32,670 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,64,012 வாக்காளர்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 1,31,663 ஆண் வாக்காளர்களும், 1,34,347 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2,66,013 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்கள் வாக்களிக்கப்பதற்காக அரியலூர் தொகுதியில் 376 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 377 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 753 வாக்குச்சாவடி மைங்கள் தயார் நிலையில் உள்ளன. அரியலூர் தொகுதியில் 78 வாக்குச்சாவடி மையங்களும், ஜெயங்கொண்டம் தொகுதியில் 52 வாக்குச்சாவடி மையங்களும் என மொத்தம் 130 வாக்குச்சாவடி மைங்கள் பதற்றமானவைகள் என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு பணியில் இருப்பவர்கள் நுண்பார்வையாளர்களாக செயல்படவுள்ளனர். அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதிகளில் 53 மண்டல அலுவலர்கள் தலைமையில் 4,556 அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். பாதுகாப்பு பணியில் 355 போலீசாரும், மத்திய துணை ராணுவ படைவீரர்களும், ஊர் காவல் படை வீரர்களும் ஈடுபடவுள்ளனர்.

Next Story