தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது


தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது
x
தினத்தந்தி 6 April 2021 12:32 PM GMT (Updated: 2021-04-06T18:02:25+05:30)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
வாக்காளர்கள் ஆர்வம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இந்த தொகுதிகளில் அரசியல் கட்சியினர் உள்பட 120 பேர் போட்டியிட்டனர். தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதால் வாக்காளர்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆனால், வாக்குப்பதிவு வேகம் அதிகமாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளால் அரசியல் கட்சியினரின் பல்வேறு செயல்பாடுகள் தடுத்து நிறுத்தப்பட்டன. 200 மீட்டருக்கு உள்ளாக அரசியல் கட்சியினர் கூட்டமாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதனால் வாக்குச்சாவடியில் இருந்து தொலைவிலேயே கட்சியினர் தங்களது பூத்களை அமைத்து வாக்காளர்களுக்கு உதவிகளை செய்து கொண்டு இருந்தனர்.
வெயில் தாக்கம்
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்றும் வெயில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் பல வாக்குச்சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. வாக்காளர்கள் வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. நேற்று காலையில் மாவட்டத்தில் சில இடங்களில் மிதமான மழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. ஆகையால் வாக்காளர்கள் நேற்று மதியமும் வாக்குச்சாவடிகள் முன்பு உற்சாகமாக நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான வியாபாரிகள் கடைகளை அடைத்து விட்டு ஓட்டு போடுவதற்காக சென்று விட்டனர். இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டும், சாலைகள் வெறிச்சோடியும் காணப்பட்டன.
கொரோனா தடுப்பு
இந்த தேர்தல் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையுடன் நடத்தப்பட்டது. இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் முககவசம் அணிந்து வந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குச்சாவடி பகுதியில் முககவசம் அளிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. 
பின்னர் வாக்காளர்கள் வலது கையில் பாலித்தீன் கையுறையை அணிந்து சென்று வாக்களித்தனர். அதே போன்று வாக்குச்சாவடியில் பணியாற்றிய அனைத்து அலுவலர்களும் கையுறை,  முழு முககவசம் (பேஷ் ஷீல்டு) அணிந்து பணியாற்றினர்.
வாக்குச்சாவடிகளில் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடிகளில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதன்மூலம் முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டு இருந்தனர். இந்த பணிகளை வாக்குச்சாவடிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு பிறகு இரவு 7 மணி வரை கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்கள் வாக்களித்தனர். இரவு 7 மணிக்கு பிறகு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்காக நின்றவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
 கலெக்டர் வாக்குப்பதிவு
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலன், தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 8 மணிக்கு வரிசையில் நின்று வாக்களித்தார். இதே போன்று தி.மு.க. வேட்பாளர் கீதாஜீவன் போல்பேட்டை தங்கம்மாள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடியில் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்தார்
மேலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியை பின்பற்றி போடப்பட்டு இருந்த கோட்டில் இடைவெளி விட்டு வரிசையில் நின்றார். பின்னர் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரும் கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பாதுகாப்பு
வாக்குப்பதிவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடி முன்பு துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைதியான முறையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.


Next Story