காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் திடீர் சாலைமறியல்


காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 6 April 2021 3:42 PM GMT (Updated: 6 April 2021 3:56 PM GMT)

பா.ஜனதாவினர் டோக்கன் வினியோகித்ததாக கூறி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டார்.

கோவை,

கோவை தெற்கு தொகுதி கெம்பட்டி காலனியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு அருகில் பா.ஜனதா கட்சியினர் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களை, காங்கிரஸ் தொண்டர்கள் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். டோக்கன் கொடுத்த பா.ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரசார் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதை தேர்தல் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 

இது பற்றிய தகவல் அறிந்த தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் தனது கட்சியினருடன் சலீவன்வீதிக்கு வந்தார். அவர் வந்த பிறகும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்தவர்களை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் வீனஸ் மணி, உமாபதி, ராம்கி, கோவை போஸ் மற்றும் ஏராளமான காங்கிரசார் சலீவன் வீதியில் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா மற்றும் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மறியலில் ஈடுபட்ட காங்கிரசாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 ஆனால் காங்கிரசார் மறியலை கைவிடவில்லை. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. 

டோக்கன் வினியோகம் செய்வதாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மற்றும் டோக்கன் வினியோகம் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
 அப்போது அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அப்துல் வகாப்பும் மறியலில் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து டோக்கன் வினியோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரிகள் உறுதி அளித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story