கோவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


கோவையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 3:57 PM GMT (Updated: 6 April 2021 4:00 PM GMT)

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்போட்டனர்.

கோவை,

கோவை மாவட்டத்தில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், சூலூர், வால்பாறை, கவுண்டம்பாளையம், பொள்ளாச்சி ஆகிய 10 தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 30 லட்சத்து 82 ஆயிரத்து 28 வாக்காளர்கள் உள்ளனர். 

10 தொகுதிகளிலும் மொத்தம் 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதற்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் நேற்று முன்தினம் இரவே லாரிகளில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக காலை 6.30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சாவடிக்கு அனைத்து கட்சி ஏஜெண்டுகளும் வந்ததும் அவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. 

வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் கட்சி ஏஜெண்டுகள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னத்துக்கு எதிராக பொத்தானை அழுத்தி அந்த வாக்குகள் சரியாக பதிவாகிறதா? என்று சோதிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த வாக்குகள் அனைத்தும் அழிக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட வந்த வாக்காளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களான உடல் வெப்ப கருவி மூலம் சோதனை செய்தல், கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல் ஆகியவை முடிந்து வாக்காளர்களுக்கு வலது கையில் போடும் வகையில் பிளாஸ்டிக் கையுறைகள் வழங்கப்பட்டன. முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் வாக்காளரின் பாகம் எண் மற்றும் வரிசை எண் சரிபார்த்த பின்னர் அவருடைய அடையாள அட்டை எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வாக்காளர்கள் கையெழுத்திட்டனர். இதற்கு தேர்தல் அலுவலர்கள் வழங்கிய பேனாவை பயன்படுத்தாமல், சில வாக்காளர்கள் பேனா கொண்டு  சென்று கையெழுத்திட்டனர்.

இதையடுத்து வாக்காளர்களின் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு எந்திரத்தை வாக்குச்சாவடி அலுவலர் ஆன் செய்தார். இதைத் தொடர்ந்து வாக்காளர் மறைவான இடத்தில் வைக் கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ளும் வி.வி.பேட் எந்திரத்தில் வேட்பாளரின் பெயர் மற்றும் அவரது சின்னம் 7 வினாடிகள் தெரிந்தது. 

அதை பார்த்து வாக்காளர் உறுதி செய்த பின்னர் அவர்கள் வெளியே வந்தனர். வாக்களிக்க வந்த 90 சதவீதம் பேர் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை காண்பித்து வாக்களித்தனர். காலை முதல் மதியம் 1 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. அதன்பின்னர் வாக்குப்பதிவில் மந்தம் நிலவியது. மாலை 4 மணி முதல் மீண்டும் வாக்குப்பதிவு சூடு பிடிக்க தொடங்கியது.

கோவையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவியது. ஆனால் நேற்றுக்காலையில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. இதனால் கோவை மாநகரில் உள்ள பெரும்பாலான வாக்குச்சாவடிகளிலும் காலை 6 மணி முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்க தயாரானார்கள். 

கடும் வெயில் மற்றும் கொரோனா தொற்று காரண மாக முன்எச்சரிக்கையாக காலையில் முன்கூட்டியே வந்து ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பெரும்பாலானவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள். இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்தவர்களின் வாகனங்களை வாக்குச்சாவடிக்கு அருகில் நிறுத்த போலீசார் அனுமதிக்கவில்லை. 

வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் வந்த வாகனங்கள் மட்டும் வாக்குச்சாவடிக்கு அருகில் நிறுத்தப்பட்டன.

வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடிக்கு முன்பு சாமியானா போடப்பட்டிருந்தது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக சக்கர நாற்காலிகள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தயார் நிலையில் இருந்தது. 

மேலும் அவர்களுக்கு சாய்வு தளம், குடிதண்ணீர் வசதி செய்யப்பட்டிருந்தது. வாக்காளர்கள் காலை முதல் மாலை வரை இடைவெளியின்றி ஓட்டுப்போட்டனர். 

பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். அந்த வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது. மேலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய தமிழக சிறப்பு காவல் படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.

கோவை புறநகர் பகுதிகளில் காலை முதல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. சி.பி.எம். கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் காலை 6.30 மணி முதல் வாக்காளர்கள் வரிசையில் காத்து நின்றனர். 248 எண் வாக்குச்சாவடியில், அரசியல் கட்சிகளின் முகவர்கள் காலை 7 மணிக்கு வராததால், ஓட்டுப்பதிவு தாமதம் ஆனது. அவர்கள் வந்த பின்னர் காலை 7.15-க்கு பின்னர் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. 

தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட குனியமுத்தூர், சுண்டக்கா முத்தூர், சுண்டப்பாளையம், ஆலாந்துறை, நரசிபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலை 11 மணி வரை நீண்ட வரிசையில் நின்று பலரும் ஓட்டு போட்டனர். 

பகல் 3 மணியளவில் வெயில் காரணமாக பலரும் ஓட்டுப்போட வரவில்லை. இதனால் நரசிபுரம், தொண்டா முத்தூர் உள்ளிட்ட பல வாக்குச்சாவடிகள் பகல் 3 மணியளவில் வெறிச்சோடி காணப்பட்டது. ஒவ்வொருவராக வந்து ஓட்டு போட்டனர். மாலை 4 மணிக்கு பின்னர் வெயில் தாக்கம் குறைந்ததும் வாக்குச்சாவடிகளில் மீண்டும் கூட்டம் காணப்பட்டது.

Next Story