2 வாக்குச்சாவடிகளில் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே மோதல்


2 வாக்குச்சாவடிகளில் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே மோதல்
x
தினத்தந்தி 6 April 2021 7:08 PM GMT (Updated: 2021-04-07T00:38:53+05:30)

விழுப்புரம் அருகே 2 வாக்குச்சாவடிகளில் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்ததால் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த பிடாகம் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தின் அருகில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியினரும் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் நின்றுகொண்டு அந்த வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க வந்த வாக்காளர்களிடம் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படி போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு கேட்டனர். இதனால் வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியிலிருந்தே இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை இருந்தது.
இந்நிலையில் மதியம் 2.30 மணியளவில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்பதில் இரு தரப்பினருக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்குகொருவர் திட்டிக்கொண்டதோடு கையால் தாக்கிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவத்தினர் துப்பாக்கியை மேலே தூக்கி உயர்த்தி காண்பித்தவாறு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர். இருப்பினும் அந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்து வந்ததால் அங்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது.

மற்றொரு இடத்தில்....

இதேபோல் சகாதேவன்பேட்டை கிராமத்திலுள்ள வாக்குச்சாவடி மையத்தின் அருகிலும் பொதுமக்களிடம் ஆதரவு கேட்பதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு மோதலாக மாறியது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்துபோகச் செய்தனர். அதன் பின்னர் அந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
இந்த சம்பவத்தினால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story