25 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற வாக்குச்சாவடி

25 கிலோ மீட்டர் தள்ளிச் சென்ற வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்த வாலிபர்
சிங்கம்புணரி
சிங்கம்புணரி மீனாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது 23), இவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிங்கம்புணரி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் வாக்களித்தார். இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்ட காரணத்தால் புதிய வாக்காளர் அட்டை விண்ணப்பித்து பெற்று இருந்தார். அதில் அவருக்கு வீட்டின் முகவரி மீனாட்சி நகர், சிங்கம்புணரி என்று தான் இருந்தது. இந்நிலையில் நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு வாக்களிக்க சென்றபோது, அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அவரது பெயர் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ் தனது வாக்கு எங்குள்ளது என்று இணையதளத்தில் ஆய்வு செய்தபோது சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஜெயங்கொண்டநிலை என்ற ஊராட்சியில் இருப்பது தெரியவந்தது. இருந்தாலும் அவர் அங்கு சென்று தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடிவு எடுத்தார். இதைத்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டநிலை கிராமத்திற்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
வாக்காளர் அடையாள அட்டையில் வீட்டின் முகவரி மீனாட்சி நகர், சிங்கம்புணரி என இருக்கும்போது 25 கிலோ மீட்டர் ெதாலைவில் உள்ள மற்றொரு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் விக்னேஷ் பெயர் மாறியது எப்படி என தெரியவில்லை. இது குறித்து அங்குள்ள தேர்தல் அலுவலரிடம் அவர் புகார் தெரிவித்தார்.
Related Tags :
Next Story