வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு


வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு
x
தினத்தந்தி 6 April 2021 7:43 PM GMT (Updated: 6 April 2021 7:43 PM GMT)

திருப்பூர் அவினாசியில் வாக்குச்சாவடிகளில் எந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது.

அனுப்பர்பாளையம்
திருப்பூர் அவினாசியில் வாக்குச்சாவடிகளில் எந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானது.
எந்திர கோளாறு
சட்டமன்ற தேர்தலையொட்டி திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாவிபாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 6 மணிக்கு அங்கிருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் ஊழியர்கள் மாதிரி வாக்குப்பதிவு செய்து பார்த்தனர். அப்போது அந்த எந்திரத்தில் 3ம் எண்ணில் இருந்த முரசு சின்னம் பதிவாகவில்லை. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வேறு எந்திரம் கொண்டு வரப்பட்ட 1 மணி நேரம் தாமதமாக 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 
இதேபோல் அருகில் உள்ள மற்றொரு வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ½ மணி நேர தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. பின்னர் 10.30 மணிக்கு மீண்டும் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, வேறு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டது. இதனால் இந்த வாக்குச்சாவடியிலும் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. 
கிருமி நாசினி
இந்த நிலையில் இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக வழங்கப்பட்டிருந்த நாற்காலிகள் பெட்டியில் இருந்து பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டு சென்று வாக்களித்து வந்தனர். 
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்டு கட்சியினர் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பின்னரே பெட்டிகளில் இருந்த புதிய நாற்காலிகள் பிரிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 
இதேபோல் இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள தன்னார்வ தொண்டர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு காலை உணவு மற்றும் போதுமான ஏற்பாடுகள் முறையாக செய்து கொடுக்கப்படாததால் சிறிது நேரத்திலேயே அந்த தன்னார்வ தொண்டர்கள் பணியை பாதியிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து அங்க வந்த வாக்காளர்கள் தாங்களாகவே கிருமி நாசினி மற்றும் கையுறைகளை எடுத்து போட்டுக் கொண்டு வாக்களிக்க சென்றனர். உரிய ஏற்பாடுகள் செய்யப்படாததே இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
அவினாசி
இதுபோல் அவினாசிசட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அவினாசிலிங்கம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் வாக்காளர்கள் நேற்று வாக்குப்பதிவு செய்துவந்த நிலையில் பிற்பகல் எந்திரம் பழுதானது. அதை பழுதுநீக்கி மீண்டும் வாக்குப் பதிவு நடைபெற்ற போது மீண்டும் எந்திரம் பழுதடைந்தது.  இப்படி அடிக்கடி பழுதானால் தி.மு.க. நிர்வாகிகள், எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். 
இதையடுத்து பழுதடைந்த எந்திரத்தை மாற்றிவிட்டு வேறு புதிய வாக்குப் பதிவு ந்திரம் கொண்டுவரப்பட்டு தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றது. இயந்திரம்பழுதானதால் அங்கு வாக்குப் பதிவு ஒருமணிநேரம் தடைபட்டது.

Next Story