போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்


போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 6 April 2021 7:46 PM GMT (Updated: 6 April 2021 7:46 PM GMT)

போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

அனுப்பர்பாளையம்
சட்டமன்ற தேர்தலையொட்டி நேற்று திருப்பூர் பெரியார்காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அங்கு பணியில் இருந்த போலீசார் காலை 8 மணிக்கு அந்த பள்ளி வழியாக வாகனங்கள் செல்லாத வகையில் பெரியார்காலனி வரவேற்பு வளைவு அருகே கட்டையை சாலையின் குறுக்கே போட்டு வழியை அடைத்தனர். இதனால் பெரியார்காலனி முத்துகோபால்நகர் கவிதாலட்சுமிநகர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பின்னர் அங்கு பணியில் இருந்த அனுப்பர்பாளையம் போலீஸ்காரரிடம் கட்டையை அகற்றுமாறு கூறி உள்ளனர். ஆனால் அவர் அதை அகற்ற முடியாது என்று கூறினார். 
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல இந்த சாலையைத்தான் பயன்படுத்துகிறோம், இல்லையென்றால் 2 கிலோ மீட்டர் சுற்றிச்செல்ல வேண்டும், அந்த வழியும் பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டுள்ளது என்று கூறி அந்த போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போலீஸ்காரர் இந்த வழியாக யாரும் செல்லக்கூடாது. மீறி சென்றால் பொதுமக்கள் மீது வழக்கு போடப்படும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொதுமக்கள் வேறு வழியின்றி மற்றொரு பாதை வழியாக தங்கள் வீடுகளுக்கு சென்றனர். சிறிது நேரம் கழித்து மாநகராட்சி மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு மட்டும் அந்த வழியாக செல்ல அனுமதி வழங்கியதை தொடர்ந்து பொதுமக்கள் மீண்டும் போலீசாரிடம் முறையிட்டனர். இதையடுத்து சாலையின் குறுக்கே போடப்பட்ட கட்டை அகற்றப்பட்டு, பொதுமக்கள் செல்வதற்கு வழி எற்படுத்தி கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story