ஏர்வாடி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்

ஏர்வாடி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
ஏர்வாடி, ஏப்:
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டத்தையொட்டி நம்பித்தலைவன் பட்டையத்தில் இருந்து கீழத்தெருவை சேர்ந்தவர்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அப்போது போலீசார் ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று கூறி மேள, தாளங்களை பறித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வந்த மேலத்தெருவை சேர்ந்தவர்களுக்கும், கீழத்தெருவை சேர்ந்தவர்களுக்கும் மோதல் வெடித்தது. இதனிடையே கீழத்தெருவை சேர்ந்த கிராம மக்கள் போலீசார் மேளங்களை பறித்ததற்கு கண்டனம் தெரிவித்தும், தாக்குதல் நடத்திய மேலத்தெருவை சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திடீர் என நம்பிதலைவன் பட்டையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதனிடையே நம்பிதலைவன் பட்டையத்தை சேர்ந்த சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நம்பிதலைவன் பட்டயம் கீழத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் போலீசார் பொய் வழக்குப்பதிவு செய்துள்ளதாக புகார் தெரிவித்து நேற்று தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு 1,500 ஓட்டுகள் வரை உள்ளது. போராட்டத்தின் காரணமாக மதியம் வரை ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. மேலும் அவர்கள் அங்குள்ள பிள்ளையார் கோவில் அருகே திரண்டு போலீசாருக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பினர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் சமாதான கூட்டம் நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்று உறுதியளித்ததை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை விலக்கி கொண்டு வாக்களிக்க சென்றனர்.
Related Tags :
Next Story