ரெயிலில் ஆண் பிணம்


ரெயிலில் ஆண் பிணம்
x
தினத்தந்தி 6 April 2021 8:41 PM GMT (Updated: 2021-04-07T02:11:04+05:30)

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒருவர் பிணமாக கிடந்தார்.

நெல்லை, ஏப்:
நெல்லைக்கு, தாதரில் இருந்து ஒரு எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த 3-ந் தேதி வந்தது. அந்த ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் 5-வது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று (புதன் கிழமை) காலை 7 மணிக்கு மீண்டும் இந்த ரெயில் நெல்லையில் இருந்து தாதர் புறப்பட்டுச் செல்லவேண்டும். இதற்காக இந்த ரெயிலை சுத்தப்படுத்தி பராமரிக்கும் பணிக்காக நேற்று முன்தினம் ரெயில்வே ஊழியர்கள் எடுத்து பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டனர். அப்போது எஸ்-2 பெட்டியில் 67-ம் நம்பர் படுக்கையில் ஒருவர் இறந்துகிடந்தார். மேலும் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதுபற்றி நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்யதாஸ், முத்தமிழ்ச் செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நடத்தினார்கள். மேலும் அவர் வைத்திருந்த ஆதார் அட்டையை வைத்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் நெல்லை அருகே உள்ள துலுக்கர்குளத்தைச் சேர்ந்த விநாயகம் (வயது 52) என்று தெரியவந்தது. உடனே போலீசார் அவருடைய உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தனர். அப்போது விநாயகம் மும்பையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு ரெயிலில் வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் எப்படி இறந்தார்? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story