தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு


தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 6 April 2021 8:59 PM GMT (Updated: 6 April 2021 8:59 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் 5 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது.

தென்காசி, ஏப்:
தென்காசி மாவட்டத்தில் 5 சட்டசபை தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. இதில் பொதுமக்கள் பலர் ஆர்வமாக வந்து ஓட்டுப்போட்டனர்.

தென்காசி மாவட்டம்

தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளில் 6 லட்சத்து 54 ஆயிரத்து 985 பெண் வாக்காளர்களும், 6 லட்சத்து 81 ஆயிரத்து 936 ஆண் வாக்காளர்களும், 35 இதர வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 956 வாக்காளர்கள் உள்ளனர்.

1,884 வாக்குச்சாவடிகள்

இவர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு வசதியாக மாவட்டம் முழுவதும் 1,884 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 143 பதற்றமான வாக்குச்சாவடிகள் ஆகும். இந்த வாக்குச்சாவடிகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் 834 பேர், ஆசிரியர்கள் மற்றும் பிற துறைகளை சேர்ந்த ஊழியர்கள் 9 ஆயிரத்து 44 பேர், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் 3 ஆயிரத்து 768 பேர் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் வாக்குச்சாவடிகள் மற்றும் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் 1,584 போலீசார், 360 துணை ராணுவத்தினர், 250 ஊர்க்காவல் படையினர் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த போலீசார் 250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்குச்சாவடி நுழைவு வாசலில் சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் வாக்காளர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் கையில் கிருமி நாசினி தெளித்து கையுறையும் வழங்கி அனுப்பி வைத்தனர்.
ஒருசில வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலிகள் இல்லாததால் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமப்பட்டனர். முதன் முறையாக வாக்களிக்க வந்த இளம் வாக்காளர்கள் தங்களது பெற்றோருடன் ஆர்வமாக வந்து முதல் வாக்கை பதிவு செய்தனர். முதியோர்கள் தங்களது குடும்பத்தினர் உதவியுடன் வந்து வாக்கு அளித்தனர்.

திடீர் மழை

இந்த வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 1,016 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. கடையநல்லூர் தொகுதி புன்னையாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வாக்காளர்களை வரவேற்கும் வகையில் அலங்கார வளைவு அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு சில வாக்குச்சாவடிகளில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தன.
தென்காசி மாவட்டத்தில் இடைகால், கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியத்துக்கு பிறகு ஆங்காங்கே திடீரென்று மழை பெய்தது. கொட்டும் மழையிலும் இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மழையால் வாக்குப்பதிவு பாதிப்பு ஏற்படவில்லை.

வேட்பாளர்கள்

சங்கரன்கோவில் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் ராஜலட்சுமி சங்கரன்கோவிலிலும், ஆலங்குளம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன் கரிசல்பட்டியிலும், தென்காசி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் பாவூர்சத்திரத்திலும், கடையநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணமுரளி செங்கோட்டையிலும், வாசுதேவநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோகரன் விஸ்வநாதபேரியிலும் ஓட்டு போட்டனர்.
சங்கரன்கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராஜா தென்காசி சிந்தாமணியிலும், சுரண்டை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் ஆலடிப்பட்டியிலும், வாசுதேவநல்லூர் தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சதன்திருமலைக்குமார் புளியங்குடியிலும், கடையநல்லூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் சங்கரன்கோவிலிலும், ஆலங்குளம் தொகுதி பனங்காட்டு படை கட்சி வேட்பாளர் ஹரி நாடார் மேலஇலந்தைகுளத்திலும் ஓட்டு போட்டனர்.


பாதுகாப்பு ஏற்பாடுகள்

தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்தல் பணிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாக்குச்சாவடிகளில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு இருந்தன. வாக்காளர்கள் அனைவருக்கும் கிருமி நாசினி வழங்கப்பட்டது. கையுறையும் வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவில் பிரச்சினைகள் எதுவும் ஏற்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களித்தனர்.

Next Story