அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்; கார் கண்ணாடி உடைப்பு


அ.தி.மு.க.- தி.மு.க.வினர் மோதல்; கார் கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 6 April 2021 9:25 PM GMT (Updated: 2021-04-07T02:55:47+05:30)

அ.தி.மு.க.- தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

செந்துறை:
அரிலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு(வயது 55). இவர் செந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருக்கிறார். பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன்(45), அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை கிளை செயலாளராக உள்ளார். நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது இளங்கோவன் தனது கிராமத்தில் உள்ள வயதானவர்களை அடிக்கடி அழைத்து சென்று வாக்கு போட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த செல்வராசு பிலாக்குறிச்சி கிராமத்திற்கு வந்து தி.மு.க. பூத் ஏஜெண்டிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த இளங்கோவனுக்கும், செல்வராசுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆனது. இதில் இளங்கோவன் காயமடைந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து இளங்கோவனின் ஆதரவாளர்கள் செல்வராசை சரமாரியாக தாக்கினர்.
 இதனைக்கண்ட போலீசார் அவரை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி வாக்கு மையத்திற்கு உள்ளே கொண்டு வந்தனர். ஆனால் இளங்கோவன் ஆதரவாளர்கள் உள்ளே வந்து வேனில் புகுந்து மீண்டும் சரமாரியாக தாக்கினர். மேலும் செல்வராசு வந்த காரின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் மற்றும் கூடுதல் போலீசார் விரைந்து வந்து கூட்டத்தினரை கலைத்தனர். இதைத்தொடர்ந்து செல்வராசை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதேபோல் இளங்கோவன் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story