தபால் வாக்கு வேண்டாம் நேரில் தான் ஓட்டு போடுவேன்


தபால் வாக்கு வேண்டாம் நேரில் தான் ஓட்டு போடுவேன்
x
தினத்தந்தி 6 April 2021 9:50 PM GMT (Updated: 6 April 2021 9:50 PM GMT)

தபால் வாக்கு வேண்டாம், நேரில் தான் ஓட்டு போடுவேன் என்று 95 வயதில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வந்து முதியவர் வாக்களித்தார்.

தஞ்சாவூர்;
தபால் வாக்கு வேண்டாம், நேரில் தான் ஓட்டு போடுவேன் என்று 95 வயதில் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் வந்து முதியவர் வாக்களித்தார்.
95 வயது முதியவர்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதியில் உள்ளது ஈச்சங்கோட்டை. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 95). விவசாயியான இவர் தற்போது தஞ்சையில் வசித்து வருகிறார்.
இவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறார். எங்கு சென்றாலும் உறவினர்கள் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக உறவினர்கள் அவரிடம் தபால் வாக்கு பதிவு செய்கிறீர்களா என கேட்டுள்ளனர்.
நேரில் தான் ஓட்டு போடுவேன்
ஆனால் ராமசாமி தபால் வாக்கு வேண்டாம். நான் வாக்குச்சாவடி மையத்திற்கு நேரில் சென்று தான் ஓட்டு போடுவேன் என கூறியுள்ளார். அதன்படி நேற்று காலை தஞ்சையில் இருந்து காரில் அவரை ஈச்சங் கோட்டையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து வந்தனர். காரிலிருந்து அவரை உறவினர்கள் கைத்தாங்கலாக இறக்கி சக்கர நாற்காலி மூலம் வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல வேண்டுமானால் படியில் ஏறி செல்ல வேண்டும் என்பதால் உறவினர்கள் அவர்களை தூக்கி சென்றனர். பின்னர் அவர் தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு வெளியே வந்தார்.
ஜனநாயக கடமை
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் 30க்கும் மேற்பட்ட முறை வாக்களித்து உள்ளேன். தபால் வாக்கு போடுவதில் எனக்கு விருப்பம் இல்லாததால் நேரில் வந்து வாக்களித்து எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன். என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பின்னர் அவரை மீண்டும் காரில் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

Next Story