11 தொகுதிகளிலும் விறுவிறுப்பு: சேலத்தில் 75.33 சதவீதம் வாக்குப்பதிவு


11 தொகுதிகளிலும் விறுவிறுப்பு: சேலத்தில் 75.33 சதவீதம் வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 7 April 2021 12:10 AM GMT (Updated: 7 April 2021 12:10 AM GMT)

11 தொகுதிகளிலும் நேற்று விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 75.33 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

சேலம்:
11 தொகுதிகளிலும் நேற்று விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடந்தது. சேலம் மாவட்டத்தில் மொத்தம் 75.33 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
தேர்தல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. சேலம் வடக்கு, சேலம் தெற்கு, சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளில் நேற்று காலை 7 மணி முதல் 11 மணி வரை விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது. ஆண்களும், பெண்களும் காலையில் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியதை காணமுடிந்தது. இதுதவிர, வயதான முதியவர்களும் தங்களது குடும்பத்தினர் உதவியுடன் வந்து ஆர்வத்துடன் வாக்களித்து சென்றனர். 
முதல்முறையாக இளைஞர்களும், இளம் பெண்களும் மிகவும் ஆர்வமுடன் வந்து ஓட்டுபோட்டனர். ஒருசில வாக்குச்சாவடிகளில் கர்ப்பிணிகள் ஆர்வமுடன் ஓட்டுப்போட வந்தனர். அவர்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வாக்களிக்க அதிகாரிகள் உதவி புரிந்தனர்.
விறுவிறுப்பான வாக்குப்பதிவு
அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு காலை 6.30 மணிக்கு ஏராளமான வாக்காளர்கள் வந்திருந்தனர். ஆனாலும் 7 மணிக்கு ஓட்டுப்பதிவு நேரம் ஆரம்பித்த பிறகு அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது, கொரோனா பரவல் காரணமாக வாக்காளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். மேலும், வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்பு சானிடைசர் கைகளில் தெளித்து சுத்தம் செய்தும், உடல் வெப்ப பரிசோதனை செய்தும், வாக்காளர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்பட்டனர். 
தொடர்ந்து வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டுப்போட்டனர். மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.
தேவூர்
சேலம் குகை மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வயதான முதியவர்கள் வாக்களிக்க வந்தனர். பின்னர் அவர்கள், சக்கர நாற்காலியில் அமர வைத்து வாக்குச்சாவடிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த பணியில் மாநகராட்சி ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர்.
தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் காலையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவானது. இதில் அதிகளவில் முதியவர்கள்  வாக்களித்தனர். கெங்கவல்லி தொகுதியில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். கெங்கவல்லி தொகுதிக்குட்பட்ட கூடமலை ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மதியம் 1 மணி அளவில் வெறிச்சோடி காணப்பட்டது. பெரும்பாலான வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்ததால், வெறிச்சோடி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சங்ககிரி, ஓமலூர் சட்டமன்ற தொகுதிகளில் காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.  சில இடங்களில் பெண்கள் கைக்குழந்தையுடன் வந்து வாக்களித்து சென்றனர். 
போலீஸ் பாதுகாப்பு
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 238 வாககுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டிருந்தது. அந்த வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் தேர்தல் அலுவலகம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் நேரடியாக கண்காணிக்கப்பட்டது. இந்த வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு தொடங்கிய உடன், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், மாவட்ட தேர்தல் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பினர். மேலும், ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு நிலவரம் தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், மாவட்டம் முழுவதும் 11 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதலில் தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்போட்டபிறகு, அந்தந்த தொகுதிக்கு சென்று வாக்குப்பதிவு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மாவட்டம் முழுவதும் வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் சில வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திடீரென பழுதடைந்தது. பிறகு அந்த மின்னணு எந்திரங்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வாக்குப்பதிவு கொளுத்தும் வெயிலிலும் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்தது.
75.33 சதவீதம்
மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் ராமன் நேற்று இரவு அறிவித்தார். . அதன்படி, சேலம் மாவட்டத்தில் மொத்தம் 75.33 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 80.09 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story