ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது


ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் குண்டம், தேர்த்திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
x
தினத்தந்தி 7 April 2021 12:27 AM GMT (Updated: 2021-04-07T05:57:40+05:30)

ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

ஈரோடு
ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நேற்று பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 
குண்டம்-தேர்த்திருவிழா
ஈரோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் மற்றும் வகையறா கோவில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் எளிமையாக குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று இரவு 9 மணிக்கு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் ஆகிய 3 கோவில்களிலும் பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி
இன்று (புதன்கிழமை) 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு, காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து அன்று காலை 9 மணிக்கு தேர்வடம் பிடித்தல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. வருகிற 12-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 13-ந்தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.
கட்டுப்பாடுகள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி முக கவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள்ளும், தேரோட்டத்திலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். திருவிழாவின்போது சிறு குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். கூழ் ஊற்றுதல், பிரசாதம், அன்னதானம் வழங்குவதற்கும், கோவில் பகுதியில் திருவிழா கடைகளுக்கும் அனுமதி இல்லை. மேலும் அக்னி சட்டி, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. மஞ்சள் நீராடுதலில் செயற்கை வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்து, இயற்கையான மஞ்சளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story