சத்தியமங்கலம் அருகே ‘சர்கார்’ பட பாணியில் வாக்குப்பதிவு செய்த கலெக்டர் அலுவலக ஊழியர்


சத்தியமங்கலம் அருகே ‘சர்கார்’ பட பாணியில் வாக்குப்பதிவு செய்த கலெக்டர் அலுவலக ஊழியர்
x
தினத்தந்தி 7 April 2021 12:30 AM GMT (Updated: 2021-04-07T06:00:26+05:30)

சத்தியமங்கலம் அருகே ‘சர்கார்’ பட பாணியில் கலெக்டர் அலுவலக ஊழியர் தனது வாக்கை பதிவு செய்தார்.

டி.என்.பாளையம்
சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 32) இவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணி செய்து வருகிறார். பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட கெஞ்சனூர் அரசு பள்ளிக்கூடத்துக்கு சரவணன் வாக்களிக்க நேற்று சென்று உள்ளார். பின்னர் அவர் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச்சாவடி மையத்தில் இருந்த தேர்தல் பணியாளரிடம் காண்பித்து உள்ளார். அப்போது அங்குள்ள தேர்தல் பணியாளர்கள் உங்களது வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்து விட்டார் என ெதரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் என்னுடைய வாக்கை வேறு ஒருவர் எப்படி பதிவு செய்ய முடியும் என அங்கிருந்த பணியாளர்களிடம் கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளார். இதையடுத்து அவருக்கு அங்கிருந்த தேர்தல் பணியாளர்கள் ‘சர்கார்’ பட பாணியில் 49 பி என்ற டெண்டர் ஓட்டு போட அனுமதித்தனர். 
இது குறித்து சரவணன் கூறுகையில், ‘ஒவ்வொரு தேர்தலிலும், நான் தவறாமல் வாக்களித்து வருகிறேன். நேற்று வாக்குப்பதிவு செய்ய வந்த போது எனது வாக்கை வேறு ஒருவர் பதிவு செய்துவிட்டார் என தேர்தல் பணியாளர்கள் கூறியதை கேட்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். பின்பு நான் கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்கிறேன் என விவரத்தை கூறி அடையாள அட்டையை காண்பித்தேன். இதையடுத்து தேர்தல் பணியாளர்கள் என்னை சமாதானம் செய்து 49 பி என்ற டெண்டர் ஓட்டு போட அனுமதித்தனர்,’ என்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story