கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது தாக்குதல் 3 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்


கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மீது தாக்குதல் 3 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தம்
x
தினத்தந்தி 7 April 2021 12:48 AM GMT (Updated: 7 April 2021 12:48 AM GMT)

கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக 3 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

பர்கூர்:
கள்ள ஓட்டு போடப்பட்டதாக புகார் தெரிவித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அவருடைய கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக 3 மணி நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.
கள்ள ஓட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட காரகுப்பம் ஊராட்சி எமக்கல் நத்தம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தம் 689 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நேற்று மதியம் ஒரு மணி வரையில் 64 சதவீத வாக்குப்பதிவு நடந்தது.
அப்போது வாக்குச்சாவடிக்குள் சிலர் கள்ள ஓட்டு போட வந்ததாக அ.தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க. ஏஜெண்டுகள்  தி.மு.க. ஏஜெண்டுகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்து பர்கூர்  சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) அங்கு காரில் வந்தார். பின்னர் அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டார். 
தாக்குதல்
அப்போது சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் தாசில்தார் சண்முகம் ஆகியோரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த எம்.எல்.ஏ.வின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த சம்பவங்களை கண்டித்து சி.வி.ராஜேந்திரன் மற்றும் அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்தில் போலீசாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் மற்றும் அதிரடி படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அந்த வாக்குச்சாவடியில் தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.
பரபரப்பு
இதையடுத்து அவரிடம் பேசிய போலீஸ் சூப்பிரண்டு, தேர்தலை நிறுத்த முடியாது. உங்கள் மீதும், காரை சேதப்படுத்தியவர்கள் மீதும் புகார் கொடுங்கள். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மாலை 4.15 மணி அளவில் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இன்ஸ்பெக்டர் முரளி, தேர்தல் அலுவலர் பாக்கியலட்சுமி உள்ளிட்டோர் விசாரித்து வருகிறார்கள்.

Next Story