கடமலைக்குண்டு அருகே சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கம்; பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழும் அதிசயம்


கடமலைக்குண்டு அருகே சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கம்; பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழும் அதிசயம்
x
தினத்தந்தி 7 April 2021 2:28 PM GMT (Updated: 2021-04-07T19:58:32+05:30)

கடமலைக்குண்டு அருகே மலைக்குகையில் சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கத்தின் மீது பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழும் அதிசயத்தை பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர்.

கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு அருகே மலைக்குகையில் சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கத்தின் மீது பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழும் அதிசயத்தை பக்தர்கள் கண்டு பரவசம் அடைந்தனர். 
சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கம்
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே எரித்தட்டு மலையடிவாரத்தில் கொம்புகாரன்புலியூர் கிராமம் உள்ளது. அந்த எரித்தட்டு மலையின் ஒரு பகுதியில் மிகக்குறுகிய அளவிலான குகை ஒன்று உள்ளது. இந்த குகையில் சித்தர்கள் தவம் இருந்ததாக பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 
இந்தநிலையில் நேற்று காலை அந்த குகையின் உள்பகுதியில் சிறிய பாறை ஒன்று சிவலிங்கம் போன்று அமைப்பில் இருப்பதை அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் பார்த்தனர். மேலும் அந்த சிவலிங்கத்தின் மீது குகையின் மேற்பரப்பில் இருந்து சொட்டு சொட்டாக பாறை நீர்த்துளிகள் விழுவதையும் கண்டனர்.
இந்த அதிசய நிகழ்வு குறித்து கொம்புகாரன்புலியூர் கிராம மக்களிடம், அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மலை குகையில் சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கத்தை பார்ப்பதற்காக கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சிவலிங்கத்தையும், அதன்மீது பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழுவதையும் பார்த்து பரவசம் அடைந்தனர். மேலும் அந்த சிவலிங்கத்திற்கு அவர்கள் மாலை அணிவித்து வழிபாடு செய்தனர். அந்த மலை குகை மிகக்குறுகிய அளவில் இருந்ததால் பொதுமக்கள் தவழ்ந்து சென்று சிவலிங்கத்தை தரிசனம் செய்தனர். 
படையெடுத்த பக்தர்கள்
மேலும் இந்த தகவல் கடமலைக்குண்டு, தேவராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுத்தீ போன்று பரவியது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் எரித்தட்டு மலைக்கு படையெடுத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டமனூர் வனத்துறை அதிகாரிகள், கொம்புகாரன்புலியூர் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எரித்தட்டு மலை, வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருப்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அங்கிருந்து சென்றனர்.
இதற்கிடையே கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் எரித்தட்டு மலைக்கு சென்று தானாக உருவான சிவலிங்கத்தையும், அதன்மீது பாறையில் இருந்து நீர்த்துளிகள் அபிஷேகமாக விழுவதையும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். 
இதற்கிடையே குகையில் உருவான சிவலிங்கத்திற்கு விழா ஏற்பாடு செய்து, பூஜை நடத்த கொம்புகாரன்புலியூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

Next Story