நிலம் வழங்கியவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள் விழுப்புரத்தில் பரபரப்பு


நிலம் வழங்கியவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த கோர்ட்டு ஊழியர்கள் விழுப்புரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 7 April 2021 5:02 PM GMT (Updated: 7 April 2021 5:02 PM GMT)

வீட்டு வசதி வாரியத்திற்கு நிலம் வழங்கியவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம், 

வீட்டுவசதி வாரியத்திற்கு இடம்

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் சவீதா தியேட்டர் அருகில் உள்ள 7 ஏக்கர் 32 சென்ட் இடத்தில் 6 ஏக்கர் 75 சென்ட் இடத்தை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்காக கையகப்படுத்த கடந்த 5.4.1991 அன்று அப்போதைய கடலூர் மாவட்ட நில எடுப்பு தனி தாசில்தார் நில ஆர்ஜிதம் செய்ததன் பேரில் அந்த இடம் கையகப்படுத்தப்பட்டது.
இதற்காக அந்த இடத்தின் உரிமையாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. சண்முக உடையாரின் மகன்களான சிவானந்தம் (வயது 66) என்பவர் உள்பட அவரது சகோதரர்களுக்கு சதுரடிக்கு ரூ.8.10 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு உரிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
இதில் சிவானந்தத்திற்கு பங்காக கிடைத்த 1 ஏக்கர் 50 சென்ட் இடத்திற்கு ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்து 732 வழங்குவதாக கடந்த 31.7.2002-ல் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இழப்பீட்டு தொகை மிகவும் குறைவாக இருப்பதாகவும், அந்த தொகையை உயர்த்தி தரக்கோரியும் சிவானந்தம், விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இழப்பீடு

அப்போது சதுரடிக்கு ரூ.500 வீதம் ஒரு ஏக்கர் 50 சென்ட் இடத்திற்கு ரூ.39 கோடியே 36 லட்சத்து 59 ஆயிரத்து 337-ஐ மனுதாரர் சிவானந்தத்திற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வழங்க வேண்டும் என்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மோனிகா, கடந்த 28.4.2018 அன்று உத்தரவிட்டார். ஆனால் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உரிய இழப்பீட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் மனுதாரர் சிவானந்தம் தரப்பில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கோபிநாதன், சம்பந்தப்பட்ட மனுதாரர் சிவானந்தத்திற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உரிய இழப்பீட்டு தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி அலுவலகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய நேரிடும் என்றும் கடந்த 24.3.2021 அன்று உத்தரவிட்டார்.

ஜப்தி செய்ய முயற்சி

இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உரிய இழப்பீட்டு தொகையை சிவானந்தத்திற்கு வழங்கவில்லை. இதையடுத்து அவர் நேற்று காலை கோர்ட்டு ஊழியர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றனர்.
உடனே அவர்களிடம் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சில நாட்கள் அவகாசம் வழங்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். அதற்கு இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2.6.2021 அன்று வருவதாகவும், அதற்கு முன்பாக உரிய இழப்பீட்டு தொகையை வழங்கும்படி அறிவுறுத்தினர்.

பரபரப்பு

இதை ஏற்றுக்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன், இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று வழக்கின் அடுத்தகட்ட விசாரணைக்குள் இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி அதற்கான உறுதி அறிவிப்பு கடிதத்தை கோர்ட்டு ஊழியர்களிடம் வழங்கினார். அந்த கடிதத்தை பெற்ற கோர்ட்டு ஊழியர்கள், தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு நிலம் வழங்கியவருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story