கத்தியால் குத்தி ரவுடி கொலை


கத்தியால் குத்தி ரவுடி கொலை
x
தினத்தந்தி 7 April 2021 5:46 PM GMT (Updated: 2021-04-07T23:16:53+05:30)

மயிலாடுதுறையில் கத்தியால் குத்தி ரவுடி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறையில் கத்தியால் குத்தி ரவுடி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 வாக்குவாதம்
மயிலாடுதுறை ரெயிலடி காவிரி ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன்(வயது 48). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ள அய்யப்பன் நேற்று முன்தினம் குடிபோதையில் ஆற்றங்கரை தெருவில் வசிக்கும் திருநங்கைகள் சிலரை திட்டிவிட்டு சென்றுள்ளார். 
இதுகுறித்து திருநங்கைகள் அதே பகுதியை சேர்ந்த வடிவேலு மகன் கணேசன் என்பவரிடம் முறையிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கணேசன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அய்யப்பனை தட்டி கேட்டுள்ளார். அப்போது அய்யப்பனுக்கும், கணேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
ரவுடி குத்திக்கொலை
இதையடுத்து கணேசனும் அவரது நண்பர்களும் சேர்ந்து அய்யப்பனை உருட்டுக்கட்டையால் தாக்கியதோடு கத்தியால் குத்தி உள்ளனர். இதில் கழுத்து பகுதியில் பலத்த கத்திக்குத்து காயத்துடன் தப்பி ஓடிய அய்யப்பன் சிறிது தூரத்தில் ஆற்றங்கரையோரம் மயங்கி கீழே விழுந்துள்ளார். அய்யப்பனை தாக்கிய கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நள்ளிரவு 12 மணி அளவில் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அங்கு அய்யப்பன் இறந்து கிடந்துள்ளார். அய்யப்பன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பனின் தாய் மாலா(65) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
5 பேர் கைது
விசாரணையில் அய்யப்பனை அடித்தும், கத்தியால் குத்தியும் கொன்றது கணேசன் மற்றும் அவரது நண்பர்கள் என தெரிய வந்தது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த கணேசன்(43), திருவிழந்தூர் பகுதியை சேர்ந்த நீலமேகம் மகன் ரஞ்சித்(19), ஆற்றங்கரை தெருவை சேர்ந்த பாட்சா மகன் பஜூலுதீன்(21), அதே பகுதியை சேர்ந்த செந்தில் மகன் அருள்ராஜ்(21) கூறைநாடு மேல ஓத்தசரக்கு தெருவை சேர்ந்த காமராஜ் மகன் மணிகண்டன்(19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.  
இந்த சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

Next Story