வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு


வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 6:13 PM GMT (Updated: 7 April 2021 6:17 PM GMT)

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இதற்காக ஊட்டி தொகுதியில் 308 வாக்குச்சாவடிகள், குன்னூர் மற்றும் கூடலூர் தொகுதிகளில் தலா 280 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது.

வாக்குப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கினை சரிபார்க்கும் எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் உபகரணங்கள், ‘சீல்’ வைக்கப்பட்ட எந்திரங்கள் வாகனங்களில் ஏற்றப்பட்டு வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது.

ஒருசில வாக்குச்சாவடிகள் வெகு தொலைவில் இருந்ததால் நேற்று அதிகாலை வரை எந்திரங்கள் கொண்டு வந்து பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டன. கடைசியாக குன்னூர் தொகுதிக்கு உட்பட்ட தெங்குமரஹடா வாக்குச்சாவடியில் இருந்த எந்திரங்கள் வந்தது.

 3 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க பாதுகாப்பு அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அந்த அறையின் தரையில் குறிக்கப்பட்ட வரிசையின்படி வாக்குப்பதிவு எந்திரங்கள் அடுக்கி வைக்கப்பட்டது. இதை மண்டல அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சரிபார்த்தனர். வாக்குச்சாவடிகளுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தாத எந்திரங்கள் உள்ளே வைக்கப்படவில்லை.

இதையடுத்து பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட 3 அறைகளுக்கு ‘சீல்’ வைக்கும் பணி நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஊட்டி, குன்னூர், கூடலூர்(தனி) தொகுதிக்கான பாதுகாப்பு அறைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

முன்னதாக தொகுதி வாரியாக வைக்கப்பட்ட எந்திரங்கள் முகவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. அப்போது தேர்தல் பொது பார்வையாளர்கள் பனுதர் பெஹரா, ராகுல் திவாரி, மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மோனிகா, ரஞ்சித் சிங், ராஜ்குமார் உடனிருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் கூறியதாவது:-
ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி நுழைவு வாயில், அறைகளில் கதவு இருக்கும் பகுதி, சட்டமன்ற தொகுதிகள் வாரியாக அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறைகள், வளாகம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 120 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருக்கிறது

கல்லூரி வளாகத்தில் மத்திய பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்பு பிரிவு போலீசார், துணை போலீஸ் சூப்பிரண்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 308 பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மொத்தம் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

முதல் அடுக்கில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர், மீதமுள்ள 2 அடுக்கில் மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் ஈடுபடுவதற்காக 15 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

 அங்கிருந்து போலீசார் கண்காணிக்க தொலைநோக்கி வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் வாக்கு எண்ணிக்கை தேதி வரை அரசியல் கட்சி முகவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் சோதனை செய்த பின்னரே வாகனங்களை உள்ளே அனுமதிக்கின்றனர். ஊட்டி வாக்கு எண்ணும் மையம் போலீஸ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.


Next Story