நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் வாக்களித்தனர்


நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 10 ஆயிரம் பேர் வாக்களித்தனர்
x
தினத்தந்தி 7 April 2021 6:13 PM GMT (Updated: 7 April 2021 6:34 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 10 ஆயிரத்து 54 பேர் வாக்களித்தனர். கடந்த தேர்தலை விட நீலகிரியில் வாக்குசதவீதம் குறைந்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. ஊட்டி தொகுதியில் 65.67 சதவீத வாக்குப்பதிவு, கூடலூர் (தனி) தொகுதியில் 71.39 சதவீத வாக்குப்பதிவு, குன்னூர் தொகுதியில் 69.79 சதவீத வாக்குப்பதிவு என மொத்தம் நீலகிரியில் 69.86 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை ஒப்பிடும்போது வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து இருக்கிறது. அந்த தேர்தலில் நீலகிரியில் 70.53 சதவீதம் பேர் ஓட்டு போட்டு இருந்தனர். ஆனால் இந்த தேர்தலில் 0.67 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்து உள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் ஆண்கள் 2 லட்சத்து 82 ஆயிரத்து 623 பேர், பெண்கள் 3 லட்சத்து 4 ஆயிரத்து 319 பேர், மூன்றாம் பாலினத்தவர் 8 பேர் என மொத்தம் 5 லட்சத்து 86 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஊட்டி தொகுதியில் ஆண்கள் 69 ஆயிரத்து 232 பேர், பெண்கள் 70 ஆயிரத்து 394 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 626 பேர் வாக்களித்தனர். கூடலூர் தொகுதியில் ஆண்கள் 67 ஆயிரத்து 398 பேர், பெண்கள் 69 ஆயிரத்து 098 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 496 பேர் ஓட்டு போட்டனர். 

குன்னூர் தொகுதியில் ஆண்கள் 65 ஆயிரத்து 863 பேர், பெண்கள் 68 ஆயிரத்து 068 பேர், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 932 பேர் வாக்களித்தனர். நீலகிரியில் மொத்தம் 4 லட்சத்து 10 ஆயிரத்து 054 வாக்காளர்கள் ஓட்டு போட்டனர்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவுரையின் பேரில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாக்காளர்களுக்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இருப்பினும் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்து உள்ளது.


Next Story