வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைகளில் வைத்து பூட்டி ‘சீல்’ 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைகளில் வைத்து பூட்டி ‘சீல்’ 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 7 April 2021 6:27 PM GMT (Updated: 2021-04-07T23:57:17+05:30)

கரூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அறைகளில் வைத்து பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனால் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரூர்
சட்டமன்ற தேர்தல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. அதனடிப்படையில், கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 
வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரிக்கு சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களால் நேற்றுமுன்தினம் இரவு முதல் கொண்டு வரப்பட்டது. 
வாக்குப்பதிவு எந்திரங்கள்
அவ்வாறு கொண்டு வரப்பட்ட எந்திரங்கள் முறையாக சட்டமன்ற தொகுதி வாரியாக கணினியில் பதிவு செய்யப்பட்ட பின்னர் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. கரூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான பிரசாந்த் மு.வடநேரே, மண்டல அலுவலர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு வரப்படுவதையும், அவை அனைத்தும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளின் பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்லப்படுவதையும் இரவு முழுவதும் இருந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
‘சீல்’ வைக்கப்பட்டது
இதனைத்தொடர்ந்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களிடையே வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள விவரம் குறித்தும், பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைக்கும் முறைகள் குறித்தும் நேற்று தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட தொகுதிகளின் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையிலும், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்களின் முன்னிலையிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது. 
பாதுகாப்பு அறைகள்
கரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் வினய் பப்லானி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் சந்தன் சயன் குஹா, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் பொதுப்பார்வையாளர் நாராயண் சந்திர சர்க்கார் மற்றும் வேட்பாளர்கள், முகவர்களின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான பாதுகாப்பு அறைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
3 அடுக்கு பாதுகாப்பு
வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று தளங்களிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் 24 மணிநேர 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள்ளும், சி.சி.டி.வி. கேமரா கண்காணிப்பிற்குள்ளும் வாக்கு எண்ணிக்கை மையம் கொண்டு வரப்பட்டுள்ளது. 
சூப்பிரண்டு ஆய்வு
இதில் 72 துணை ராணுவப்படையினரும், 50 ஆயுதப்படை போலீசாரும், ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், 16 சப்-இன்ஸ்பெக்டர்கள், 72 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் சுழற்றி முறையில் பணியாற்றுகின்றனர். இதையடுத்்து பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஷேக் அப்துல் ரகுமான் (குளித்தலை), பாலசுப்பிரமணியன் (கரூர்), தட்சிணாமூர்த்தி (கிருஷ்ணராயபுரம் (தனி) ), தவச்செல்வம் (அரவக்குறிச்சி) மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story