போலீஸ் ஏட்டிடம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் நகராட்சி வருவாய் உதவியாளர் கைது


போலீஸ் ஏட்டிடம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் நகராட்சி  வருவாய் உதவியாளர் கைது
x
தினத்தந்தி 7 April 2021 7:09 PM GMT (Updated: 7 April 2021 7:09 PM GMT)

போலீஸ் ஏட்டிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெரம்பலூர் நகராட்சி உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்
பெரம்பலூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அப்பு என்கிற அப்லோசன் (வயது 45). இவர் பெரம்பலூர் நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் ஏட்டாக பணிபுரிந்து வரும் வெங்கடேசன் (45) என்பவர் புதிதாக கட்டப்பட்டுள்ள வீட்டுக்கு வரி செலுத்த கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்மையில் நகராட்சி அலுவலகத்துக்கு சென்றார். அப்போது அதற்கான வரியை குறைவாக மதிப்பீடு செய்து வழங்குவதற்காக அப்லோசன் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். லஞ்சம் கொடுக்க விரும்பாத வெங்கடேசன் இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.15 ஆயிரத்தை அப்லோசனிடம் கொடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி வெங்கடேசன் நேற்று மாலை பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹேமசித்ரா தலைமையில் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரத்தினவள்ளி, சுலோச்சனா மற்றும் போலீசார் அலுவலகத்தின் அருகே ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வெங்கேடசன், லஞ்ச பணத்தை நகராட்சி வருவாய் உதவியாளர் அப்லோசனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விரைந்து சென்று அப்லோசனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து லஞ்சமாக பெற்ற ரூ.15 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அப்லோசனின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டதாக தெரிகிறது.

Next Story