மாவட்ட செய்திகள்

ஆலங்குளத்தில் பயங்கரம்- காதல் மனைவி சரமாரி குத்திக் கொலை + "||" + Terrible in Alangulam- Love wife stabbed to death by volley

ஆலங்குளத்தில் பயங்கரம்- காதல் மனைவி சரமாரி குத்திக் கொலை

ஆலங்குளத்தில் பயங்கரம்- காதல் மனைவி சரமாரி குத்திக் கொலை
ஆலங்குளத்தில் காதல் மனைவி சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்டார்.
ஆலங்குளம், ஏப்:
ஆலங்குளத்தில் காதல் மனைவியை சரமாரியாக குத்திக்கொலை செய்த சலூன் கடைக்காரரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சலூன் கடைக்காரர்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ராஜகோபால் (வயது 28). இவர் பக்கத்து ஊரான முத்துகிருஷ்ணாபேரியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.
இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முக்கூடலைச் சேர்ந்த தனது அத்தை மகள் மல்லிகாவை (22) காதலித்து திருமணம் ெசய்து கொண்டார்.

குடும்ப தகராறு

திருமணத்துக்கு பின்னர் மல்லிகா தனது கணவருடன் ஆலங்குளம் அண்ணா நகரில் வசித்து வந்தார். மல்லிகா தனது வீட்டின் அருகில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்தார்.
இதற்கிடையே, ராஜகோபாலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்தில்...

நேற்று மாலையில் ராஜகோபால் மது குடித்து விட்டு, தனது வீட்டுக்கு சென்று மனைவியுடன் தகராறு செய்தார். பின்னர் மல்லிகா வீட்டின் அருகில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு வேலைக்கு சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜகோபால், மனைவியை பின்தொடர்ந்து கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்துக்கு சென்று மீண்டு்ம் தகராறு செய்தார்.

மனைவிக்கு கத்திக்குத்து

அப்போது ராஜகோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மனைவி என்றும் பாராமல் மல்லிகாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் வயிறு, நெஞ்சு பகுதியில் பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
உடனே அங்கிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த முருகன் மனைவி மாரியம்மாள் (52) ஓடிச் சென்று, ராஜகோபாலை தடுக்க முயன்றார். ஆனால், மாரியம்மாளையும் கத்தியால் குத்தி விட்டு ராஜகோபால் தப்பி ஓடி விட்டார்.

கணவருக்கு வலைவீச்சு

மல்லிகா, மாரியம்மாள் ஆகியோரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மல்லிகாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு செல்லும் வழியிலேயே மல்லிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த மாரியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜகோபாலை வலைவீசி தேடி வருகின்றனர். ஆலங்குளத்தில் காதல் மனைவியை சலூன் கடைக்காரர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.