தூத்துக்குடியில், வழிப்பறி திருடரிடமிருந்து மீட்கப்பட்ட 17 பவுன் நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு


தூத்துக்குடியில், வழிப்பறி திருடரிடமிருந்து மீட்கப்பட்ட 17 பவுன் நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 8 April 2021 12:00 PM GMT (Updated: 2021-04-08T17:30:42+05:30)

தூத்துக்குடியில் வழப்பறி திருடரிடம் பறிமுதல் செய்யப்பட்ட 17 பவுன் நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வழிப்பறி திருடரிடம் இருந்து மீட்கப்பட்ட 17 பவுன் தங்க நகை உரிமையாளரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
நகை பறிப்பு
தூத்துக்குடி ரோச் காலனியை சேர்ந்தவர் ரீகாந்த். இவருடைய மனைவி ஆஷா (வயது 30). இவர் கடந்த 1.2.2021 அன்று தனது ஸ்கூட்டரில் தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஆஷா கழுத்தில் கிடந்த 17 பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார். 
இதுகுறித்து ஆஷா அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
தனிப்படை
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் ஆகியோர் மேற்பார்வையில் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ், மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் நவீன மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. அந்த மோட்டார் சைக்கிள் நவம்பர் மாதத்தில் தூத்துக்குடியில் 10 மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே விற்பனை ஆகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதனால் அந்த 10 பேரின் முகவரிகளையும் எளிதாக சேகரித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். 
இந்த விசாரணையில், தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகரை சேர்ந்த சுடலைமணி மகன் நயினார் (21) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது கண்டுபிடிக்க பட்டது.
வாலிபர் கைது
இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சொகுசு வாழ்க்கைக்காக வழிப்பறியில் ஈடுபட முடிவு செய்து உள்ளார். இதனால் தன்னுடைய நவீன மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடியில் சுற்றிக் கொண்டிருந்தாராம். அப்போது தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ரோட்டில் ஆஷா தனியாக வந்ததை பார்த்து உள்ளார். உடனடியாக அவரை பின்தொடர்ந்து வந்த நயினார் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து அவரது கழுத்தில் கிடந்த 17 பவுன் தங்க சங்கிலியை பறித்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் நயினாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி, ஜெயிலில் அடைத்தனர். அவரிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 17 பவுன் தங்க நகை பறிமுதல் செய்தனர்.
இந்த நகையை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், அதன் உரிமையாளர் ஆஷாவிடம் நேற்று ஒப்படைத்தார்.

Next Story