தொழிலாளி வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்


தொழிலாளி வீட்டை சூறையாடிய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 8 April 2021 2:23 PM GMT (Updated: 8 April 2021 2:23 PM GMT)

கூடலூர் அருகே தொழிலாளியின் வீட்டை காட்டு யானைகள் சூறையாடின.

பந்தலூர்

கூடலூர் அருகே தொழிலாளியின் வீட்டை காட்டு யானைகள் சூறையாடின. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

அட்டகாசம்

கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, கரடி, புலி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.


தற்போது கடும் வெயிலின் காரணமாக வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தேடி வனப்பகுதியைவிட்டு வெளியே வரும் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

காட்டு யானைகள் முற்றுகை

இந்த நிலையில் கூடலூர் தாலுகா தேவாலா அட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன. பின்னர் அந்த யானைகள் கூலித்தொழிலாளி முருகையா என்பவரது வீட்டை முற்றுகையிட்டன. இதனால் முருகையாவின் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

இரவு 11 மணிக்கு காட்டுயானைகள் திடீரென தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் பயத்தில் முருகையா குடும்பத்தினர் சத்தம் போட்டனர். சத்தம்கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் சத்தம்போட்டும், ஒலி எழுப்பியும் காட்டு யானைகளை அங்கிருந்து விரட்டினர். பின்னர் தொழிலாளியின் குடும்பத்தினரை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.

பொதுமக்கள் பீதி

இதற்கிடையில் அங்கிருந்த சென்ற காட்டு யானைகள் மீண்டும் அங்கு வந்த தொழிலாளி முருகையாவின் வீட்டை மீண்டும் சேதப்படுத்தி சூறையாடின. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகின. 

இதுகுறித்து தேவாலா வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். ஆனால் காட்டு யானைகள் அங்கிருந்து தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்துக்குள் சென்றன.

தொடர்ந்து காட்டு யானைகள் அங்கு முகாமிட்டு வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், அந்த பகுதியை சுற்றி வசிக்கும் பொதுமக்களுக்கும் பீதியடைந்துள்ளனர்.

தொடர்ந்து தொழிலாளி வீட்டை வருவாய், வனத்துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். 

மயிரிழையில் உயிர் தப்பினோம்

காட்டு யானைகளிடம் இருந்து உயிர் தப்பியது குறித்து முருகையா குடும்பத்தினர் கூறியதாவது:- இரவு ஊருக்குள் வந்த காட்டு யானைகள் வீட்டின் முன் மற்றும் பின் பக்கத்தில் நின்றிருந்தது. இதனால் குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

 தொடர்ந்து வீட்டை உடைத்து சேதப்படுத்தியது. பயத்தில் சத்தம் போட்டதால் ஊர் பொதுமக்கள் ஓடிவந்து காப்பாற்றினர் இதனால் மயிரிழையில் காட்டுயானைகளிடம் இருந்து உயிர் தப்பினோம். 

கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வரும் சூழ்நிலையில் வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளதால் அதை சீரமைப்பதற்கு போதிய நிதியை வனத்துறையினர் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story