நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன


நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன
x
தினத்தந்தி 8 April 2021 5:35 PM GMT (Updated: 8 April 2021 5:35 PM GMT)

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால் அந்த பகுதியில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. இதனால் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்காட்டி வருகிறார்கள்.

தளி
உடுமலையை அடுத்த அமராவதி அணையில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால் அந்த பகுதியில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வருகின்றன. இதனால் பராமரிப்பு பணியில் விவசாயிகள் தீவிரம்காட்டி வருகிறார்கள்.
அமராவதி அணை
உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை நீர் ஆதாரமாக கொண்ட இந்த அணைக்கு ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் நீர்வரத்து ஏற்படுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம்  பாசன வசதி பெற்று வருகின்றன.  பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆற்றிலும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. 
அத்துடன் அமராவதி ஆற்றை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சாகுபடி தீவிரம்
கடந்த ஜனவரி மாதம் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. அமராவதி பாசன பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் நெற் பயிர்களை அறுவடை செய்ய முடியவில்லை. இதனால் அவை வயல்வெளியில் சாய்ந்து அழுகிவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் முதலீட்டு தொகையை திரும்பப் பெற முடியாமல் நஷ்டத்துக்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நாற்றங்கால் அமைத்து சாகுபடி பணியில் தீவிரம் காட்டினார்கள். 
மேலும் எந்திரத்தின் மூலம் நேரடி நெல் விதைப்பும் நடைபெற்றது. விவசாயிகளின் தீவிர பராமரிப்பு காரணமாக நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து வருகிறது.
அத்துடன் அணையில் நீர்இருப்பு கடந்த 3 மாதங்களாக முழு கொள்ளளவை நெருங்கியபடி உள்ளதால் நெற் பயிர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. இதனால் 2ம் போக நெல் சாகுபடியில் கூடுதல் விளைச்சலை ஈட்டுவதுடன் கடந்த முறை ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடியும் என்று விவசாயிகள் தெரிவித்தனர். 

Next Story