கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் டிப்பர் மோதி துப்புரவு தொழிலாளி பலி
குன்னம் அருகே கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதி துப்புரவு தொழிலாளி பரிதாபமாக இறந்தார். டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து(வயது 56). இவர் நன்னை ஊராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று இரவு நன்னை கிராமத்தில் இருந்து வேப்பூர் கிராமத்திற்கு சைக்கிளில் வந்தார்.
அப்போது எதிரே புதுவேட்டக்குடி கிராமத்தில் இருந்து எறையூர் சர்க்கரை ஆலை நோக்கி 2 டிப்பர்கள் இணைக்கப்பட்டு கரும்புகளை ஏற்றிக்கொண்டு டிராக்டர் வந்தது. அந்த டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த 2 டிப்பர், எதிர்பாராதவிதமாக மருதமுத்துவின் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த மருதமுத்து மீது டிப்பரின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மருதமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ், குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
இதற்கிடையே கரும்பு ஏற்றி வந்த டிராக்டரின் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் டிரைவரை கைது செய்ய கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story