குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 8 April 2021 7:24 PM GMT (Updated: 2021-04-09T00:54:24+05:30)

பெரம்பலூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்:

சாலை மறியல்
பெரம்பலூர் அருகே வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட தம்பிரான்பட்டி கிராமத்தில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கிராம மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் பெண்கள் உள்ளிட்டோர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.
இது குறித்து கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. 
இதனால் ஆத்திரம் அடைந்த தம்பிரான்பட்டி கிராம மக்கள், நேற்று காலை செட்டிக்குளம் - பெரம்பலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் அங்கு சென்று, மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக, அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் மறியலை கைவிட்டனர். மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story