70 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இதுவரை 70 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம் அடைந்து இருக்கிறது.
அதோடு கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்குகளில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
இதில் முதல்கட்டமாக சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதோடு கொரோனா தடுப்பூசி தொடர்பான அச்சத்தை போக்குவதற்கு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அரசு அலுவலர்கள், போலீசார் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த ஆர்வம் காட்டினர்.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் முன்கள பணியாளர்கள் 28 ஆயிரம் பேர், பொதுமக்கள் தரப்பில் 32 ஆயிரம் பேர் உள்பட இதுவரை மொத்தம் 70 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்.
அதிலும் சுகாதார பணியாளர்கள் 97 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். பொதுமக்களிடம் ஆர்வம் ஏற்பட்டதை தொடர்ந்து 2 வாரத்துக்கு ஒருமுறை, திண்டுக்கல் மாவட்டத்துக்கு கொரோனா தடுப்பூசி மருந்து வரவழைக்கப்படுகிறது.
அதன்படி தற்போது 12 ஆயிரம் ‘டோஸ்’ தடுப்பூசி மருந்து இருப்பு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story