நெற்குன்றத்தில் பயங்கரம்; தந்தை கண் எதிரே வாலிபர் வெட்டிக்கொலை; ரவுடி கும்பலுடன் மோதலால் வெறிச்செயல்


கொலையான நாராயணன்.
x
கொலையான நாராயணன்.
தினத்தந்தி 9 April 2021 10:42 AM IST (Updated: 9 April 2021 10:42 AM IST)
t-max-icont-min-icon

வீட்டின் வாசல் அருகே தந்தை கண் எதிரேயே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நெற்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரவுடி கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.

வாலிபருக்கு அரிவாள் வெட்டு

சென்னை நெற்குன்றம், சக்தி நகர், பட்டேல் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரம்மதேவன். ஆட்டோ டிரைவரான இவருடைய மகன் நாராயணன் (வயது 23). இவர், பாலிடெக்னிக் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் நாராயணன், அங்குள்ள சாலையோர கடையில் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். தனது வீட்டின் வாசல் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் நாராயணனை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.

தந்தை கண்எதிேர பலி

அந்த நேரத்தில் வீட்டின் மாடியில் பிரம்மதேவன் நின்று கொண்டிருந்தார். தனது மகனை மர்மகும்பல் அரிவாளால் வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அலறி அடித்து ஓடிவந்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

மர்ம கும்பல் வெட்டியதில் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த நாராயணன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகன் நாராயணனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், நாராயணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தனது கண் எதிரேயே மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் வேதனை அடைந்த பிரம்மதேவன், மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

ரவுடி கும்பலுடன் மோதல்

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், கொலையான நாராயணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதே பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி தனஞ்செயன் என்பவருடன் நாராயணனுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் நாராயணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து தனஞ்செயன் மற்றும் அவரது கூட்டாளிகளை தாக்கியதாக தெரிகிறது.

இந்த மோதல் சம்பவம் காரணமாக தனஞ்செயன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நாராயணனை அவரது வீட்டு வாசலிலேயே அவரது தந்தை கண்எதிரேயே வெட்டிக்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

4 பேர் கைது

எனினும் இந்த கொலைக்கு வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா? என்ற கோணத்திலும போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சாரதி (19), செல்வா (19) மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தனஞ்செயன் மற்றும் அவரது கூட்டாளிகள் மேலும் சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ரவுடி கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் தந்தை கண்எதிரேயே வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.


Next Story