தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
குன்னூரில் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குன்னூர்,
குன்னூர் மேல் கடைவீதியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த தந்தி மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அப்போது நடைபெறும் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினர் இணைந்து நடத்துவது மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இதில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கடந்த ஆண்டு தேர்த்திருவிழா கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 10 மணியளவில் குன்னூர் ஆழ்வார்பேட்டை ராமர் கோவிலில் பால் குடங்கள், தீர்த்த குடங்கள், அபிஷேக மற்றும் ஆராதனை பொருட்களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து தந்தி மாரியம்மன் கோவிலுக்கு மேள-தாளங்களுடன் ஊர்வலம் புறப்பட்டது. இதில் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஊர்வலமானது பெட்போர்டு மவுண்டு ரோடு வழியாக தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்றது. பின்னர் மாலை 7 மணிக்கு சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story