குடும்பத்தகராறு: இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை; கணவர் கைது
ஊத்துக்கோட்டை அருகே கணவர் குடிப்பழக்கத்திற்கு ஆளானதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவியுடன் தகராறு
திருவள்ளூர் மாவட்டம் நம்பாக்கம் காந்தி நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்தவர் பக்தய்யன். இவரது மகள் மோனிஷா (21). வினோத்துக்கும், மோனிஷாவுக்கும் 2 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு விச்சிகா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் வினோத் குடிப்பழக்கத்துக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இவர் தினமும் குடித்து வந்து தன் மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
தூக்குப்போட்டு தற்கொலைஇதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வினோத் மனைவியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மோனிஷா வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பென்னலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மோனிஷாவின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.