தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு
தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு.
திரு.வி.க. நகர்,
சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அலெக்சாண்டர், தி.மு.க. சார்பில் ஜோசப் சாமுவேல் போட்டியிட்டனர். சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக காத்து இருக்கின்றனர்.
இந்தநிலையில் நேற்று கொரட்டூர் 89-வது வார்டு பாடி, சீனிவாசன் நகர், சக்தி தெருவில் 4 பேர் டோக்கன் மூலம் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து வருவதாக வந்த தகவலின்பேரில் தி.மு.க.வினர் அங்கு விரைந்தனர். இதை கண்டதும் 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். 2 பேரை மட்டும் தி.மு.க.வினர் பிடித்து கொரட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.14 ஆயிரம், டோக்கன் மற்றும் சில வாக்காளர்கள் பெயர், முகவரி அடங்கிய காகிதம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி தி.மு.க. வட்ட செயலாளர் சேகர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வெங்கடேசன், தாமோதரன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய மணிகண்டன் மற்றும் பாபு ஆகியோரை தேடிவருகின்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் போலீஸ் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story