தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை-பணம் திருட்டு
பெரம்பலூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபர்கள், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டரையும் ஓட்டிச்சென்றனர்.
பெரம்பலூர்:
மேலாளர்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த முத்துசாமியின் மகன் முரளி (வயது 30). இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். முரளி திருமணத்திற்கு பிறகு தனது மனைவி மகேஸ்வரியுடன் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் வெங்கடேசபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து, வேலைக்கு சென்று வருகிறார்.
ஏற்கனவே இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மீண்டும் கர்ப்பமான மகேஸ்வரிக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 2-வதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் மகேஸ்வரி அணைப்பாடி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முரளி, ஓய்வு எடுப்பதற்காக கடந்த 9-ந்தேதி ஊட்டிக்கு சென்று விட்டார்.
நகை-பணம், ஸ்கூட்டர் திருட்டு
இந்த நிலையில் நேற்று காலை முரளி வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து முரளிக்கும், அவரது மனைவி மகேஸ்வரிக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தனர். மேலும் பெரம்பலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அணைப்பாடியில் இருந்து மகேஸ்வரி வீட்டிற்கு வந்து பார்த்தார். பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்ததோடு, அதில் இருந்த 5 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது. மேலும் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டரையும் மர்மநபர்கள் திருடிச்சென்றிருந்தனர்.
தொடர் திருட்டால் அச்சம்
இதற்கிடையே பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது, தெரியவந்தது. மேலும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூரில் தற்போது தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story