காஞ்சீபுரம் அருகே பயங்கரம்: வக்கீல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - காப்பாற்ற சென்ற நண்பரும் தாக்குதலில் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே வக்கீல் ஒருவர் மர்மநபர்களால் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் அழகரசன் (வயது 40). இவர் காஞ்சீபுரம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி காரை கிராமத்திற்குச் செல்லும் வழியில் தனது நண்பர் சங்கர் என்பவருடன் நின்று பேசிக் கொண்டிருந்த அழகரசனை, ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஓட, ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் தலை, கை, கால்களில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதனைத் கண்டு அதிர்ச்சியடைந்த அழகரசனின் நண்பர் சங்கர் அதை தடுக்க முயன்ற போது, அவரை அந்த கும்பல் வெட்டியதில் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழகரசனின் உடலை மீட்டு, காஞ்சீபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அப்போது அங்கு திரண்ட 50-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் மற்றும் உறவினர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். பிறகு போலீசார் குற்றவாளிகளை கைது செய்வது தொடர்பாக உறுதி அளித்ததன் பேரில், அவர்கள் களைந்து சென்றனர்.
இந்த நிலையில், கொலைக் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.சண்முகப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொழில் சம்பந்தமாக ஏதேனும் முன்விரோதத்தில் கொலை சம்பவம் நடந்துள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வக்கீல் ஒருவர் ஓட, ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் காஞ்சீபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story