தஞ்சையில், திடீரென கொட்டிய மழை கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி


தஞ்சையில், திடீரென கொட்டிய மழை கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 April 2021 10:26 PM IST (Updated: 13 April 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் திடீரென மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இந்த மழையினால் கோடை நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர், 

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இந்த வெயிலின் தாக்கம் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. குளிர்பான கடைகள் பழக்கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பகலில் கடும் வெயிலால் பலர் வீட்டுக்குள்ளே முடங்கினர். இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் தவித்தனர். இரவு நேரங்களில் மின் விசிறியில் இருந்து வரும் காற்று கூட அனல் காற்றாக தான் வீசியது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

திடீர் மழை

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன் தினம் லேசான தூறல் மழை காணப்பட்டது. நேற்று காலையில் வெயில் காணப்பட்டது. திடீரென மதியம் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழையாக மாறியது. தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது.

தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நடந்து சென்றவர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். வாகன ஓட்டிகளும் திடீரென பெய்த மழையினால் நனைந்தவாறு வீடு திரும்பினர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது காணப்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த திடீர் மழையால் தஞ்சையில் வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சி காணப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் கோடை நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூர் பகுதியில் நேற்று மதியம் பரவலாக மழை பெய்தது. கடந்த ஜனவரி மாதத்திற்கு பிறகு மழையே இல்லாமல் வெயிலில் தவித்து கொண்டிருந்த நிலையில் இந்த மழை சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். 

Next Story