விலை உயர்வால் வினியோகம் அடியோடு பாதிப்பு: டெல்டா மாவட்டங்களில் கடும் உரத்தட்டுப்பாடு விவசாயிகள் கவலை
விலை உயர்வால் உர வினியோகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் கடுமையான உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் அதன் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
கூடுதல் நெல் சாகுபடி
கடந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட பரப்பளவைவிட 37 சதவீதம் கூடுதலாக நடந்தது. இதனால் நெல் கொள்முதல் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் நடந்தது.
இதேபோல் சம்பா, தாளடி சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 10 ஆயிரம் ஏக்கர் வரை கூடுதலாக சாகுபடி நடந்தது.
16 ஆயிரம் எக்டேர்
தற்போது டெல்டா மாவட்டங்களில் முன் பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. ஆழ்துளை கிணறு மூலம் இந்த சாகுபடி நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 16 ஆயிரம் எக்டேர் வரை கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் குறுவை சாகுபடி இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட அதிக அளவில் நடைபெறும் என கூறப்படுகிறது.
கடும் உரத்தட்டுப்பாடு
இதற்கு தேவையான விதை நெல் மற்றும் விவசாய இடுபொருட்கள் வாங்கி இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. உரங்களும் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி முதல் உரம் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. உரம் விலை அதிகரிக்கப்பட்டதால் புதிய விலை பட்டியல் அடங்கிய உரம் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் உரக் கடைகளில் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருந்த பழைய உரம் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
குறிப்பாக காம்ப்ளக்ஸ், டி.ஏ.பி., பொட்டாஷ் போன்ற அடியுரம் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் அடியுரங்கள் கிடைப்பதில்லை. இந்த உர தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
நடவடிக்கை
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் சரிவர கிடைக்கவில்லை அதேநேரத்தில் டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் போன்ற உரங்களின் விலை ஒரு மூட்டைக்கு 50 முதல் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த வருடம் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிட போதுமான நீர் இருப்பதால் இந்த வருடமும் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகிறார்கள்.
மேலும் முன் பட்ட குறுவையான கோடை நெல்சாகுபடி அதிக அளவில் நடந்து வருகிறது. இந்த நேரத்தில் உர தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும் உரங்களின் விலை மிக, மிக அதிக அளவில் விற்கப்படுகிறது. இந்த விலையேற்றம் விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல் உள்ளது. தமிழக அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை வேண்டும்" என்றனர்.
Related Tags :
Next Story