தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு


தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 April 2021 10:47 PM IST (Updated: 14 April 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. முக கவசம் அணிந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேனி: 

தமிழ்ப் புத்தாண்டு
தமிழகம் முழுவதும் தமிழ்ப் புத்தாண்டு நேற்று கொண்டாடப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 


அதன்படி, மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான வீரபாண்டி கவுமாரியம்மன், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில், கம்பம் கம்பராயபெருமாள் கோவில், கவுமாரியம்மன் கோவில், போடி பரமசிவன் கோவில், சீனிவாச பெருமாள் கோவில், பெரியகுளம் பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.  

மாவூற்று வேலப்பர் கோவில் 
ஆண்டிப்பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி நேற்று காலையிலேயே பக்தர்கள் வந்து குவிந்தனர்.

 பக்தர்கள் வருவதை தடுக்கும் வகையில் 4 இடங்களில் போலீசார் சோதனை சாவடி அமைத்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

கோவிலுக்கு வந்த பக்தர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். 

நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்களை கோவில் வளாகத்திற்குள் மட்டும் சென்று திரும்ப போலீசார் அனுமதித்தனர். 

கோவில் கருவறை அடைக்கப்பட்ட நிலையில் 5 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் நடந்து சென்று கோவில் வளாகத்தில் நின்றபடி சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினர். 

கூடலூரில் கூடலழகிய பெருமாள் கோவில், சீலைய சிவன் கோவில், வழிவிடும் முருகன் கோவில்களில் பக்தர்கள் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். 

சிறப்பு வழிபாடு
தேனி நகரில் உள்ள கணேச கந்தபெருமாள் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மேலப்பேட்டை பத்ரகாளியம்மன் கோவில், பெத்தாட்சி விநாயகர் கோவில், காட்டு பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 

கோவிலுக்கு பக்தர்கள் முக கவசம் அணிந்து வந்தனர். 

பக்தர்களை சமூக இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்யுமாறு கோவில் பணியாளர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Next Story