இன்ஸ்பெக்டர் உடையில் சென்று மிரட்டல்: மூதாட்டியிடம் நிலத்தை அபகரிக்க முயன்ற போலீஸ் ஏட்டு கைது
இன்ஸ்பெக்டர் என்று கூறி மூதாட்டியை மிரட்டி நிலத்தை அபகரிக்க முயன்ற பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
திரு.வி.க. நகர்,
சென்னை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர ஸ்ரீ்தேவி உன்னிதன் (வயது 84). இவருக்கு அம்பத்தூர் அடுத்த அயனம்பாக்கத்தில் சொந்தமாக 23 சென்ட் காலி நிலம் உள்ளது. இவரது நிலத்தை அதே பகுதியை சேர்ந்த டேவிட் ஆனந்தராஜ் (55) என்பவர் அபகரிக்க முயற்சி செய்வதாக மூதாட்டி ஸ்ரீ்தேவி உன்னிதன் ஏற்கனவே திருவேற்காடு போலீசில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீதேவியின் வீட்டிற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் வந்த டேவிட் ஆனந்தராஜ் 2 பேருடன் வந்து, தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், நிலத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி மிரட்டியுள்ளார்.
இதில் சந்தேகமும், அதிர்ச்சியும் அடைந்த ஸ்ரீதேவியின் உறவினர் சைலேஷ் என்பவர் திருமங்கலம் போலீசுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். மேலும் அக்கம்பக்கத்தினர் சேர்ந்து மூவரையும் பிடிக்க முயன்றனர். இதற்கிடையே, இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த டேவிட் ஆனந்தராஜ் பிடிபட்ட நிலையில் மற்ற 2 பேரும் தப்பி ஓடினர்.
இதையடுத்து திருமங்கலம் போலீசார் அங்கு விரைந்து வந்து பிடிபட்ட டேவிட் ஆனந்தராஜை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், டேவிட் ஆனந்தராஜ் யானைக்கவுனி போலீஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வரை போலீஸ் ஏட்டாக வேலை செய்து வந்துள்ளார். பல்வேறு காரணங்களால் வேலைக்கு அவர் தொடர்ந்து செல்லாத நிலையில், அவரை பணிஇடைநீக்கம் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், தற்போது இன்ஸ்பெக்டராக பணிபுரிவதாக கூறி மோசடி செய்து மூதாட்டியை மிரட்டி நிலத்தை ஏமாற்றி வாங்க முயன்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ஆனந்தராஜை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story