நாகை பகுதி கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்


நாகை பகுதி கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 15 April 2021 3:13 PM GMT (Updated: 15 April 2021 3:13 PM GMT)

நாகை பகுதி கோவில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம், 

தமிழ்ப்புத்தாண்டான நேற்று நாகை பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாகை காயாரோகண சாமி, நீலாயதாட்சியம்மன் கோவிலில் உள்ள சூரியபகவான், சுந்தரவிடங்க தியாகராஜருக்கு திரவியம், மஞ்சள், பச்சரிசி, மாப்பொடி, பால், தேன்,

பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் சாமிக்கு பட்டு வஸ்திரம் அணிவிக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கபட்டது.

தொடர்ந்து சாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. இதில் சமூக இடைவெளியுடன் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதைப்போல நாகை குமரன் கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சிக்கல் சிங்காரவேலர்

சிக்கல் சிங்கார வேலவர் கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு, பால், பன்னீர், பஞ்சாமிர்தம், திரவிய பொருட்கள் மற்றும் முக்கனிகளை கொண்டும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரி சனம் செய்து வழிப்பட்டனர்.

சிங்காரவேலர் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் உள்ள அஞ்சுவட்டத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை பஞ்சாங்கம் வாசிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

வேதாரண்ேயஸ்வரர் கோவில்

வேதாரண்யம் வேதாரண்ேயஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் சென்று அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர். மேலும் வேதாரண்யம் பக்தர்குளம் மாரியம்மன் கோவில், நாட்டுமடம் மாரியம்மன் கோவில், தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவில், கள்ளிமேடு பத்ரகாளியம்மன் கோவில், கரியாப்பட்டினம் சந்தனமாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் ஆயக்காரன்புலம் கலிதீர்த்த அய்யனார் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு பால், இளநீர், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. பின்பு அப்பகுதியில் உள்ள அந்தாளிமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலிதீர்த்த அய்யனார் கோவிலுக்கு பருவமழை நன்றாக பெய்து விவசாயம் செழிக்க வேண்டி மாலை அணிந்து, இருமுடி கட்டி வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். 

Next Story