வேலூரில் ரூ.32 லட்சம் பேட்டரிகளுடன் லாரி திருட்டு. மற்றொரு லாரி டிரைவர் உள்பட 2 பேர் கைது
வேலூரில் ரூ.32 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளுடன் லாரியை திருடிய மற்றொரு லாரி டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்
பேட்டரிகளுடன் லாரி திருட்டு
வேலூர் தோட்டப்பாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 64). லாரி உரிமையாளரான இவர் அதன் டிரைவராகவும் இருந்து வருகிறார்.
குபேந்திரன் கடந்த 13-ந்தேதி இரவு ஓசூரில் இருந்து கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் யு.பி.எஸ்.சில் பயன்படுத்தப்படும் ரூ.32 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளை லாரியில் ஏற்றி சென்னையை நோக்கி புறப்பட்டார். நேற்று முன்தினம் காலை லாரி வேலூருக்கு வந்தது. குபேந்திரன் லாரியை கிரீன் சர்க்கிள் அருகே சாலையோரம் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். மீண்டும் இரவு 11 மணி அளவில் லாரியை எடுக்க வந்த குபேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அவரின் லாரி காணாமல் போயிருந்தது. இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
3 தனிப்படைகள் அமைப்பு
வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்கள் வேலூர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில், கிரீன் சர்க்கிள் அருகே நின்று கொண்டிருந்த லாரி டிரைவர,் கள்ளச்சாவி போட்டு லாரியை திருடி சென்று வேலூர் டவுன் ரெயில் நிலையம் அருகே உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கிறார்.
அதன் பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் வந்து அவருடைய லாரியை எடுத்து சென்று அதே வாகன நிறுத்தத்தில் நிறுத்துவதும். அதையடுத்து குபேந்திரனின் லாரியை அங்கிருந்து ஓட்டி செல்வதும் பதிவாகியிருந்தது.
2 பேர் கைது
அதைத்தொடர்ந்து தனிப்படையினர் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து லாரியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த லாரி ஒடுகத்தூர் அருகேயுள்ள வெங்கனபாளையத்தை சேர்ந்த சதீஷ் (35) வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தது. போலீசார் அதிரடியாக சதீஷ் வீட்டிற்குள் நுழைந்து அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது பாக்கம்பாளையத்தை சேர்ந்த முருகன் (29) லாரியை திருடி வந்து அங்கு விட்டு சென்றது தெரிய வந்தது. அதையடுத்து முருகன் மற்றும் அவருக்கு உதவிய சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரூ.32 லட்சம் மதிப்பிலான பேட்டரிகளுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
குபேந்திரன் புகார் அளித்த 5 மணி நேரத்தில் திருட்டு போன லாரியை தனிப்படை போலீசார் கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்தனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story